மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி விளாத்திகுளம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்  திரு. ஜெயச்சந்திரன் மேற்பார்வையில் விளாத்திகுளம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. வீரசோலை தலைமையில்  சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. பிரெட்ரிக்ராஜன் மற்றும் தலைமைக் காவலர்கள் திரு. காசி, திரு. மணிகண்டன், மற்றொரு திரு. மணிகண்டன், காவலர்கள் திரு. பிரபுபாண்டி மற்றும் திரு. முருகன் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் இன்று (06.07.2023) ரோந்து பணியில் ஈடுபட்டபோது, விளாத்திகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட விளாத்திகுளம் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள பொதுக்கழிப்பிடம் அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்ததில், அவர் தூத்துக்குடி ஆரோக்கியபுரம், பாலதண்டாயுத நகரை சேர்ந்த சண்முகையா மகன் அஜய் மாடசாமி (எ) மாடசாமி  (41) என்பதும் அவர் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.

உடனே மேற்படி போலீசார் எதிரியான அஜய் மாடசாமி (எ) மாடசாமியை கைது செய்து அவரிடமிருந்து  2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் மேற்படி எதிரி அஜய் மாடசாமி (எ) மாடசாமி  கடந்த 3.10.2022 அன்று சூரங்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 460 கிலோ கஞ்சா மற்றும் 240 லிட்டர் மண்ணெண்ணெய் ஆகியவற்றை 2 சரக்கு வாகனங்களில் கடத்தி வந்த வழக்கில் சம்பந்தப்பட்டு இதுவரை தேடப்பட்டு வந்த நிலையில் இன்று மேற்படி தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேற்படி கைது செய்யப்பட்ட எதிரி அஜய் மாடசாமி (எ) மாடசாமி மீது .ஏற்கனவே தாளமுத்துநகர் காவல் நிலையத்தில் கொலை முயற்சி உட்பட 3 வழக்குகளும், வடபாகம் காவல் நிலையத்தில் ஒரு கொலை முயற்சி வழக்கும், புதியம்புத்தூர் காவல் நிலையத்தில் ஒரு கொலை வழக்கும், ஆத்தூர் காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்கு உட்பட 3 வழக்குகளும், ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி காவல் நிலையத்தில் ஒரு கொலை வழக்கும் என 9 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.