விளாத்திகுளம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் "மேம்பாலம்" - தேர்தலின் போது கனிமொழி எம்.பி. சொன்னது என்னாச்சு? : அடிக்கடி விபத்தில் சிக்கி அனாமத்தாக பலியாகும் உயிர்கள்..!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே கீழ ஈரால் தேசிய நெடுஞ்சாலையில், அடிக்கடி வாகன விபத்துக்கள் ஏற்படுவதால் அப்பகுதியில் சுரங்கப்பாதையுடன் கூடிய மேம்பாலம் ஒன்று கட்டி தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால் பொது மக்களின் கோரிக்கையை அரசு பொருட்படுத்தாமல் அலட்சியமாக இருந்து வருவதால் இப்பகுதியில் தொடர்ந்து அதிகப்படியான வாகன விபத்துக்கள் ஏற்பட்டு வருவதாகவும், இதனால் உடனடியாக இப்பகுதியில் மேம்பாலம் அமைத்தால் மட்டுமே அதிகப்படியான உயிரிழப்புகளை தவிர்க்க முடியும் என்றும் அரசுக்கு பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.. (தற்போதைய தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி தேர்தல் பிரச்சாரத்தின் போது இப்பகுதி மக்களிடம், இங்கு விரைவில் மேம்பாலம் அமைக்கப்படும் என்று கூறிச் சென்றார்... ஆனால் தற்போது வரை அதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.)
தூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் (NH-38) அமைந்துள்ள கீழ ஈரால் கிராமத்தில் மேம்பாலம் இல்லாத காரணத்தினால் அடிக்கடி வாகன விபத்துக்கள் ஏற்பட்டு வருவதால் ஆண்டொன்றுக்கு நூற்றுக்கணக்கான பேர் பரிதாபமாக உயிரிழந்த வருகின்றனர். இந்த சாலையானது, தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து - மதுரை, சென்னை, பெங்களூர் வரையிலும் செல்லும் முக்கிய தேசிய நெடுஞ்சாலையாக இருந்து வருகிறது. இதில் கீழ ஈரால் கிராமத்தில் கிட்டத்தட்ட 7000 குடும்பங்கள் வசித்துவரும் சூழ்நிலையில் இங்குள்ள மக்கள், பள்ளி-கல்லூரி மாணவர்கள் சாலையை பத்திரமாக கடப்பதே மிகப்பெரிய சவாலாக இருந்து வருகிறது. அதிலும் முறையான மேம்பாலம் இங்கு தற்போது அமைத்து தராத காரணத்தால் ஆண்டுதோறும் இப்பகுதியில் ஏற்படும் விபத்துக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதன் காரணமாக அப்பகுதி மக்கள் தூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கீழ ஈரால் பகுதியில் சுரங்கபாதையுடன் மேம்பாலம் அமைத்து தரவேண்டும் என்று அரசுக்கு பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.
மக்களின் கோரிக்கையை அரசாங்கமும், ஆட்சியாளர்களும் கண்டுகொள்ளாத ஒரே காரணத்தினால் இப்பகுதியில் அதிகப்படியான வாகன விபத்துக்கள் ஏற்பட்டு அனாமத்தாக பல உயிர்கள் போகும் ஆபத்தான சூழ்நிலைதான் தற்போதும் நிலவி வருகிறது. அதிலும் இங்கு அதிகளவில் அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரி வாகனங்கள் சாலை கடக்கும் போது அனேக நேரங்களில் வாகன விபத்தில் சிக்கி உடல் ஊனம் மற்றும் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது வாக்குச் சேகரிக்க இப்பகுதிக்கு வந்த கனிமொழி எம்.பி.-யிடம் இங்குள்ள மக்கள் மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி கோரிக்கை வைத்தனர். அப்போது வெற்றி பெற்றவுடன் உடனடியாக மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுப்பேன் என்று உறுதி அளித்துச் சென்றதாகவும், ஆனால் நாடாளுமன்ற உறுப்பினரான பின்பு தங்களையும், தங்களது கோரிக்கையையும் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி மறந்துவிட்டதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
கிட்டத்தட்ட சராசரியாக ஆண்டிற்கு நூற்றுக்கணக்கான வாகன விபத்துக்களால் பல உயிரிழப்புகள் ஏற்படும் கீழ ஈராலில், பொது மக்களின் கோரிக்கையை ஏற்று உடனடியாக மேம்பாலம் ஒன்றை அமைத்து விபத்துகளால் பறிபோகும் உயிர்களுக்கு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது இந்த பகுதி மக்களின் மிக முக்கியமான கோரிக்கையாக இருந்து வருகிறது....