தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில், 100 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த ஊராட்சி ஒன்றியத்தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகின்றது. இப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் "அறம் செய்" என்ற பெயரில் வாட்ஸ்அப் குழு ஒன்றினை ஆரம்பித்து இப்பள்ளிக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர். அந்த வகையில், அதன் நீட்சியாக தற்போது "அறம் செய்" வாட்ஸ் அப் குழுவில் இருக்கும் இப்பள்ளியைச் சேர்ந்த முன்னாள் மாணவர்கள்,
இப்பள்ளியில் பயின்று வரும் மாணவர்களை தனியார் பள்ளி மாணவர்களைப் போல இருக்கையில்(BENCH -DESK) அமர வைக்க வேண்டும் என்ற முயற்சியில் இப்பகுதியில் உள்ள தொழிலதிபர்கள், தொண்டு நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள் என பலரது நிதியுதவி ஒத்துழைப்போடு ,
இந்த அரசு பள்ளி மாணவர்களுக்காக ரூ.4.65 லட்சம் மதிப்பில் தனியார் பள்ளிகளில் இருக்கக்கூடிய இருக்கைகளுக்கு இணையாக சற்றும் குறைவில்லாத தரமான இருக்கையில் மழலை மாணவர்களை அமர வைத்து அசத்தியுள்ளனர் "அறம் செய்" வாட்ஸ்அப் குழுவினர்....
தமிழ்நாட்டின் கல்விதரத்தை பொருத்தமட்டில் தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளும் ஆங்கில வழிக் கல்வி, கணினி மூலம் கற்றல் என தரம் உயர்ந்திருப்பினும், இப்பள்ளியை போன்று ஏனைய பள்ளிகளில் மாணவர்கள் இன்றளவும் வகுப்பில் தரையில்தான் அமர வைக்கப்பட்டுள்ளனர் என்பதே நிதர்சனம். இதனை கருத்தில் கொண்டு, "நாங்கள்தான் இப்பள்ளியில் தரையில் அமர்ந்து படித்தோம்... தற்போதாவது இங்கு பயின்று வரும் மாணவர்களை தனியார் பள்ளிக்கு இணையாக இருக்கையில் அமர வைக்க வேண்டும்"
என்ற கருத்தை ஒரே நோக்கமாகக் கொண்டு லட்சக்கணக்கில் நிதி உதவி பெற்று அற்புதமான அறப் பணியை செய்து முடித்துள்ளனர் இந்த "அறம் செய்" whatsapp குழுவினர். இச்சம்பவம் இப்பகுதியில் பெரும் பேசு பொருளாக மாறியதைத் தொடர்ந்து இப்பள்ளி முன்னாள் மாணவர்களின் அற்புத முயற்சிக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன....