விளாத்திகுளம் அருகே சுதந்திரம் அடைந்த ஆண்டு முதல் தற்போது வரை முறையான குடிநீர் இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள்!
ஆட்சியாளர்கள் மாறி மாறி ஆட்சி செய்தாலும் சுகாதாரமற்ற கண்மாய் நீரை குடிக்கும் அவல நிலையில் கிராம மக்கள்: ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள லட்சுமிபுரம் கிராமத்தில் சுதந்திரம் அடைந்த ஆண்டு முதல் தற்போது வரை முறையான குடிநீர் வசதி இல்லாமல் திறந்தவெளியில் இருக்கும் கண்மாய் நீரை தான்,அந்த கிராம மக்கள் குடிப்பதற்கும் சமைப்பதற்கும் தற்போது வரை பயன்படுத்தி வருகின்றனர். ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை ஆட்சியாளர்கள் மாறினாலும், லட்சுமிபுரம் கிராம மக்களின் குடிநீர் வாழ்வாதாரம் ஆண்டுக்கு பின்னோக்கிய செல்வதாக அக்கிராம மக்கள் கூறுகின்றனர். அரசு சார்பில் குடிநீருக்காக JAL JEEVAN உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் அக்கிராமத்திற்கு கொண்டு வந்தாலும், அதை நடைமுறைப்படுத்தாமல் கிடப்பில் போடுவதாக கிராம மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இதுகுறித்து 50க்கும் மேற்பட்ட லட்சுமிபுரம் கிராம மக்கள் இன்று புதூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர், அங்கு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இல்லாததால், கிராம மக்கள் அங்கேயே மணிக்கணக்காக காத்திருந்தனர்,மதியம் 1 மணி அளவில் வந்த பொறியாளரிடம் தாங்கள் வாட்டர் கேனில் கொண்டு வந்த தங்கள் பெருகும் குடிநீரை கொண்டு வந்து அந்த குடிநீரை பருகுமாறு கேட்டுக் கொண்டு,தங்களின் கிராம நிலை குறித்து எடுத்துக்கூறினர்.
அதேபோல் மகாத்மா காந்தி தேசிய ஊரக 100 நாள் வேலை உறுதித் திட்டத்தில் அக்கிராமத்தில் உள்ள 170 அட்டைதாரர்களுக்கு பதிலாக வெறும் 20 அட்டைதாரர்களுக்கு மட்டுமே வேலை வழங்கப்படுவதாகவும், மீதமுள்ள 150 அட்டைதாரர்கள் 100 நாள் வேலை இல்லாமல் இருப்பதாகவும் குற்றம் சாட்டினர்.
இதனை அடுத்து வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள் அடுத்த வியாழக்கிழமைக்குள் உங்களுக்கு குடிநீர் மற்றும் 100 நாள் வேலைகளுக்கான பணி அமைக்கப்படும் என்று உறுதியளித்ததை தொடர்ந்து கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்நிகழ்வில் மாவட்டத்தலைவர் கே.சரவணகிருஷ்ணன்.பொதுச்செயலாளர் எஸ்.கே.சேதுராஜ், ஒன்றியத்ததலைவர் கே.எம்.பிரஸ்நேவ்ரமேஷ், பழனிமுருகன், அன்னபூரணி,அஷ்டலட்சுமி,ராஜு,முருகேசன்,காமராஜ்,உமைய செல்வம்,வேல்சாமி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.