எட்டையபுரம் மகாகவி மணிமண்டபத்தில் உறுதிமொழி எடுத்துக் கொண்ட தவெக-வினர் ; இனிப்பு வழங்கி கொண்டாட்டம்! 



மகாகவி பாரதியாரின் 143-வது பிறந்தநாள் விழா இன்று அரசு மற்றும் பலதரப்பு மக்களால் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், பாரதியார் பிறந்த மண்ணான தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள எட்டையபுரத்தில் அமைந்துள்ள அவரது இல்லம் மற்றும் பாரதியார் மணிமண்டபத்தில் பல்வேறு கட்சியினர் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் சார்பில் பாரதியாருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதன் ஒரு பகுதியாக தமிழக வெற்றிக் கழகத்தின் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் அஜிதா ஆக்னல் தலைமையில் ஏராளமான தவெக தொண்டர்கள் மகாகவி பாரதியார் மணிமண்டபத்திற்கு வருகை தந்து அங்கு அமைந்துள்ள பாரதியாரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதைத்தொடர்ந்து அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கி பாரதியின் பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர். பின்னர் கட்சியினர் அனைவரும் மகாகவி பாரதியாரின் சிலை முன்பாக நின்று உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். மேலும் மகாகவி பாரதியார் பிறந்தநாளை முன்னிட்டு எட்டயபுரத்திற்கு வருகை தந்த தமிழக வெற்றிக் கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் அஜிதா ஆக்னல்-க்கு கட்சியினர் பட்டாசு வெடித்து, பொன்னாடை போற்றி, நினைவு பரிசுகள் வழங்கி உற்சாக வரவேற்பளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.