விளாத்திகுளம் அரசுப் பேருந்தில் உடைந்து தொங்கும் "EMERGENCY EXIT DOOR" : ஆபத்தை உணராமல் கயிற்றைக் கட்டி வேடிக்கை பார்க்கும் பணிமனை மேலாளர் : வைரலாகும் வீடியோ காட்சிகள்...!



தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அரசுப் போக்குவரத்து கழக பணிமனையைச் சேர்ந்த TN72.N2100 என்ற வாகன பதிவெண் கொண்ட அரசுப் பேருந்து விளாத்திகுளம் - கோவில்பட்டி வழித்தடத்தில் இயக்கப்பட்டு வருகிறது. இப்பேருந்தின் பின்பகுதியில் கடைசி இருக்கையின் பக்கவாட்டில் அமைக்கப்பட்டிருக்கும் "EMERGENCY EXIT DOOR" உடைந்து தொங்கிக்கொண்டிருக்கூடிய ஆபத்தான நிலையில் அதனை விளாத்திகுளம் போக்குவரத்து கழக பணிமனையைச் சேர்ந்த அதிகாரிகள் சரிசெய்யாமல் சிறிய கயிற்றின் மூலம்  அதைக் கட்டிக்கொண்டு மிகவும் அலட்சியமாக தொடர்ந்து இப்பேருந்தை இயக்கி வருகின்றனர். இந்நிலையில், இப்பேருந்தில் கோவில்பட்டியில் இருந்து விளாத்திகுளம் நோக்கி பயணித்த பயணி ஒருவர், இப்பேருந்தில் பயணிக்கும் பயணிகளுக்கு விபத்தை ஏற்படுத்தும் வகையில்  உடைந்து தொங்கிக் கொண்டிருக்கும் இந்த பேருந்தின் "EMERGENCY EXIT DOOR"-யை வீடியோ எடுத்து வாட்ஸ் அப், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ காட்சிகள் தற்போது இப்பகுதியில் வேகமாக பரவி வைரலாகி வருகிறது...




தமிழ்நாடு அரசு அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் பயணிக்கும் அனைத்து பயணிகளின் பாதுகாப்பு நலன் கருதி பேருந்துகளில் விபத்து மற்றும் தீ விபத்து ஏற்படும் சமயங்களில் உடனடியாக அதில் பயணிப்பவர்கள் பேருந்தில் இருந்து உடனடியாக வெளியே வருவதற்காக அமைக்கப்பட்டதுதான் இந்த "EMERGENCY EXIT DOOR". ஆனால் விளாத்திகுளம் அரசு போக்குவரத்து கழக பணிமனையை சேர்ந்த அரசுப் பேருந்து ஒன்றில் இதன் மூலமாகவே விபத்து ஏற்படும் அபாயம் தொடர்ந்து வருகிறது. அரசு அதிகாரிகள், தனியார் பள்ளி, கல்லூரி வாகனங்களில் இது போன்ற "EMERGENCY EXIT DOOR" சரியாக பராமரிக்கப்பட்டு இயங்கும் நிலையில் உள்ளதா? என்று ஆய்வு செய்து அவ்வாறு இல்லாத பட்சத்தில் அந்த கல்வி நிறுவனங்களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் அரசு பேருந்து ஒன்றே இவ்வளவு மோசமான நிலையில் இயக்கப்பட்டு வருகிறது. இதனை முறையாக கண்காணிக்க வேண்டிய விளாத்திகுளம் அரசு போக்குவரத்துக் கழக பணிமனை மேலாளர், இப்பேருந்தை இயக்கிய ஓட்டுநர், நடத்துநர் மீது துறைசார்ந்த உரிய நடவடிக்கை எடுப்பதோடு மட்டுமின்றி, வீடியோ-வால் வைரலான இந்த பேருந்து உட்பட இப்பணிமனையில் உள்ள அனைத்து பேருந்துகளையும் ஆய்வுக்கு உட்படுத்தி பொதுமக்கள் பாதுகாப்பாக பயணிக்கும் வகையில் ஏற்பாடு செய்து தர வேண்டும் என்று இப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் மாவட்ட ஆட்சியர் மற்றும் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்....