விளாத்திகுளம் அருகே  எப்போது வேண்டுமானாலும் இடிந்து நிலையில், புதர்மண்டி சிதிலமடைந்து கிடக்கும் 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற ஆலயம்!


தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே கீழநம்பிபுரம் கிராமத்தில் தமிழ்நாடு இந்து சமய அறநிலைத்துறைக்கு பாத்தியப்பட்ட சுமார் 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ சீனிவாச பெருமாள் சமேத ஸ்ரீதேவி, பூதேவி திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலானது முறையான பராமரிப்பின்றி கருங்கற்களால் அமைக்கப்பட்ட மேற்கூரைகள், கற்தூண்கள் என வாயிற்கதவு முதல் கருவறை வரை ஒட்டுமொத்த கோவிலும் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழக்கூடிய சூழ்நிலையில் மிகவும் சிதலமடைந்து புதர்மண்டி காணப்படுகிறது. அவ்வாறு கோவிலின் உட்புறத்தில் மேற்கூரை சரிந்து விழும் நிலையில் இருப்பதால் அதனை மரச்சட்டங்கள் கொண்டு அண்டக்கொடுத்து வைத்துள்ளனர் அங்குள்ள மக்கள். இதனால் கோவிலின் உள்ளே சென்று சுவாமி தரிசனம் செய்யவதற்கே பொதுமக்கள் அச்சப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, இக்கோவிலுக்கு ஒதுக்கப்பட வேண்டிய பராமரிப்பு நிதிகள் முறையாக வழங்கப்படாததன் காரணமாக இக்கோவில் முறையான பராமரிப்பின்றி அடர்ந்த வனம் போல காட்சியளிப்பதோடு அன்றாட வழக்கமான பூஜைகள் நடத்துவதற்கு கூட பணமின்றி பரிதாப நிலையில் இருந்து வருகிறது...கிட்டத்தட்ட 600 ஆண்டுகளுக்கு முன்பு விஜயநகர பேரரசு காலத்தில் கட்டப்பட்ட இந்த பிரசித்தி பெற்ற ஸ்ரீ சீனிவாச பெருமாள் ஆலயத்தை கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்நாடு இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் அரசு எடுத்துள்ளது. இருப்பினும், தற்போது வரை இக்கோவிலை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் துளியும் கண்டுகொள்ளாததன் விளைவால் தற்போது இந்த கோவிலின் கட்டுமானம் முதல் நிர்வாகம் வரை அனைத்தும் மிகவும் மோசமான நிலையில் இருந்து வருகிறது. மேலும் மதுரை சித்திரை திருவிழாவின் போது கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தை போல இந்த ஆலயத்திலும் அருள் பாலித்து வரும் ஸ்ரீ சீனிவாச பெருமாள் இங்குள்ள வைப்பாற்றில் இறங்கி தீர்த்தவாரி வைபவமும், திருத்தேரோட்டமும் வெகு சிறப்பாக நடைபெற்று வந்தது என்றும்,  காலப்போக்கில் அரசு கோவிலைக் கண்டு கொள்ளாததால் இத்தகைய சிறப்பு வாய்ந்த நிகழ்வுகள் நடைபெறாமல் அழிந்து போய்விட்டன என்றும் சொல்லப்படுகிறது. குறிப்பாக இக்கோவிலுக்கு சொந்தமான பல ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பதாகவும், அதனை மீட்டு கோவிலின் வருவாய் வரும் வகையில் அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வதோடு, மிகவும் பழமையான சிறப்பு வாய்ந்த இத்திருத்தலத்தில் பக்தர்கள் அனைவரும் மன நிறைவுடன் தரிசனம் செய்யும் வகையில் கோவிலின் பழமை மாறாமல் தற்போது உள்ள கற்தூண்கள், கருங்கற்களைக் கொண்டே ஆகம விதிப்படி நல்ல முறையில் புதுப்பிப்பதற்கு நடைபெற்று வரக்கூடிய இந்தாண்டு பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறை இக்கோவிலுக்கு ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு செய்வதோடு அறநிலையத்துறை அதிகாரிகள் மேற்பார்வையில் விரைந்து இவ்வாலயத்தை சீரமைப்பு செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் தரப்பில் தமிழ்நாடு முதல்வருக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது...