பிரச்சாரத்துக்கு காலதாமதமாக வந்ததால் பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்ட விளாத்திகுளம் திமுக வேட்பாளர்!
திமுக வேட்பாளர் மார்க்கண்டயேனுக்கு கிராம மக்கள் உற்சாக வரவேற்பு!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளராக போட்டியிடும் தற்போதைய சட்டமன்ற உறுப்பினரான திமுக வேட்பாளர் மார்கண்டயேன் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியினருடன் சேர்ந்து விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியான புதூர் அயன்கரிசல்குளம், மாவில்பட்டி,அழகாபுரி, கோடாங்கிபட்டி, பெருமாள்கோவில்பட்டி, மெட்டில்பட்டி,வெம்பூர்,மேலக்கரந்தை, மாசார்பட்டி, அயன்ராசா பட்டி தாப்பாத்தி உள்ளிட்ட பகுதி மக்களிடம் மாலை 3 மணி முதல் இரவு 10 மணி வரை பிரச்சாரம் மேற்கொள்ள இருந்தார்.
இந்த நிலையில் நெல்லை மாவட்டத்தில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்வதற்காக தூத்துக்குடி விமான நிலையம் வந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை வரவேற்பதற்காக திடீரென தூத்துக்குடி செல்ல இருந்ததால் 7:30 மணிக்கு வர இருந்த திமுக வேட்பாளர் மார்கண்டயேன் இரவு 9:30 மணிக்கு மேலக்கரந்தை கிராமத்திற்கு வந்தார்.
சட்டமன்ற உறுப்பினரும் திமுக வேட்பாளருமான மார்கண்டயேனை காண காத்திருந்த மேலக்கரந்தை கிராம மக்களிடம் தாமதமாக வந்த காரணத்தை கூறி பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்டார்.
அதனைத் தொடர்ந்து மேலக்கரந்தை கிராமத்திற்கு ஒன்றிய குழு பெருந்தலைவராக இருந்த போதில் இருந்து தற்போது சட்டமன்ற உறுப்பினராக கிராமத்திற்கு செய்த நலத்திட்ட பணிகளை எடுத்துக் கூறி உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
அதனைத் தொடர்ந்து மேலக்கரந்தை கிராமத்தில் உள்ள முத்துராமலிங்கதேவர் சிலை மற்றும் ராமசாமி நாயக்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்வில் ஒன்றிய செயலாளர்கள் மும்மூர்த்தி, ராதாகிருஷ்ணன் மதிமுக ஒன்றிய செயலாளர் ராஜ்குமார், மாசார்பட்டி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அய்யாதுரை கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.