விளாத்திகுளம் அருகே சிதிலமடைந்த நிலையில் காணப்படும் பேருந்து நிறுத்தம் : பல ஆண்டுகளாக 4 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் அவதி!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள P. ஜெகவீரபுரம் கிராமத்தில் சுமார் 45 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பேருந்து நிறுத்த்தின் மேற்கூரை கான்கிரீட் பெயர்ந்து, சுவர்கள் உடைந்த நிலையில் கட்டிடம் முழுவதும் மிகவும் சிதலமடைந்து பயன்படுத்துவதற்கு முற்றிலும் பாதுகாப்பற்று எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் காணப்படுகிறது. இந்தப் பேருந்து நிறுத்தத்தை, P. ஜெகவீரபுரம் கிராம மக்கள் மட்டுமின்றி அருகிலுள்ள சேர்வைக்காரன்பட்டி, சங்கரப்பநாயக்கன்பட்டி, புதுச்சின்னையாபுரம் என 4 கிராமங்களைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள் முதல் வேலைக்குச் செல்வோர் என ஏராளமான பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தி வந்தனர். ஆனால், இந்த பேருந்து நிறுத்தம் கட்டப்பட்டு 45 ஆண்டுகளுக்கு மேலாகிய காரணத்தினால் பேருந்து நிறுத்த கட்டிடம் முழுவதும் சிதலமடைந்து ஆபத்தான நிலையில் இருப்பதால் பொதுமக்கள் இந்த பேருந்து நிறுத்தத்தை பயன்படுத்துவதற்கு அச்சமடைந்து, பேருந்து நிறுத்தத்திற்கு அருகில் உள்ள மரத்தின் நின்றவாறு பேருந்துக்காக காத்திருக்கின்ற அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அதிலும் இங்கு புதிய பேருந்து நிறுத்தம் கட்டி தரப்படாததால்... "வெயில் காலங்களில் அருகே உள்ள மரத்தின் நிழலில் நின்றுவிடுவோம்... ஆனால், மழைக்காலங்களில் மழையில் நனைவதை தவிர வேறு வழி இல்லை", "கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியும் இங்கு பேருந்து நிறுத்தம் கட்டுவதற்கு எந்த நடவடிக்கையும் இல்லை"-என்று அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் வேதனையுடன் கூறுகின்றனர்...
ஆகையால், 4 கிராம மக்களின் அடிப்படை தேவையான பேருந்து நிறுத்தம் இவ்வாறு மிகவும் மோசமான நிலையில் இருப்பதால் அதனை உடனடியாக இடித்து அகற்றி விட்டு புதிய பேருந்து நிறுத்தம் கட்டி தர வேண்டும் என்பது அப்பகுதியைச் சேர்ந்த அனைத்து கிராம மக்களின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது.