"EMERGENCY-க்கு கூப்பிட்டால் டாக்டர் வந்துடுவாங்க..." : அரசு மருத்துவமனையில் இரவில் மருத்துவர்கள் இல்லை என்ற கேள்விக்கு அமைச்சர் கீதாஜீவன் அலட்சிய பதில்!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் ரூ.5 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட உள்ள கூடுதல் கட்டிடங்களுக்கு தமிழக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைகள் துறை அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அமைச்சர் கீதா ஜீவன் விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில், மருத்துவர் அறை, ஸ்கேன் அறை, அறுவை சிகிச்சை அரங்கு, நோயாளிகள் பிரிவு, மின்தூக்கி உள்ளிட்ட வசதிகளுடன் 2 தளங்களுடன் அமையவுள்ள கட்டிடத்திற்கு பூமி பூஜை செய்து கட்டிடப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கீதா ஜீவன்,புதிதாக ரூ.5 கோடி மதிப்பில் இம்மருத்துவமனையில் கட்டப்படவிருக்கும் கூடுதல் கட்டிடத்தில் இருக்கக்கூடிய வசதிகள் பற்றி கூறியதோடு... இதனை உடனடியாக கட்டி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று ஒப்பந்ததாரருக்கு அறிவுரை வழங்கப்பட்டதாக தெரிவித்தார்.
* இம்மருத்துவமனையில் பகல் நேரங்களில் போதுமான மருத்துவர்கள் இல்லை என்றும், இரவில் மருத்துவரே இல்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து இருக்கிறது... இது எப்போது நிவர்த்தி செய்யப்படும் என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு?
அதற்கு பதில் அளித்த அமைச்சர் கீதா ஜீவன், "பகலில் தான் அதிக கேஸ் வருங்க... 2 டாக்டர்கள் பாக்காங்க... இரவில் செவிலியர்கள் இருப்பார்களாயிருக்கும்... EMERGENCY-க்கு கூப்பிட்டால் டாக்டர் வந்துடுவாங்க... காலி பணியிடம் இருக்கும் போது மருத்துவத்துறை இந்த மாதிரி ஏற்பாடு தான் செய்து வருகிறது..." , "கூடுதலாக டாக்டர்கள் நியமிப்பதற்கும், இங்க பணி மாற்றம் செய்தால் கொண்டு வருவதற்கும் அமைச்சரிடம் கேட்கிறோம்" என்று பதில் அளித்தார்.
* மகளிர் உரிமைத் தொகை கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து சரிவர ஏறவில்லை என்ற குற்றச்சாட்டு கொடுத்த கேள்விக்கு?
"அப்படி ஒரு குறைபாடு இல்லையே... சொல்லுங்க எங்கன்னு கேட்கலாம்... குறிப்பிட்டு சொல்லுங்கள் சரி பண்ணலாம்" என்று கூறிச் சென்றார்.