"நார்மல் ஆளுனா போய் கேட்கலாம்..., இவங்கள நிப்பாட்டுனா எம்.எல்.ஏ, தாசில்தார், பேரூராட்சி தலைவர் எல்லாம் உடனே கால் பண்றாங்க... நான் என்ன செய்ய முடியும்?" - கனிமவளக் கொள்ளையை தடுத்த விஏஓ-வின் பகீர் ஆடியோ!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வி.புதூரில் இருந்து செங்கோட்டை செல்லும் வழியில் அரசிற்கு சொந்தமான புறம்போக்கு நிலத்தில் கடந்த சில நாட்களாக கிட்டாட்சி, டிப்பர் போன்ற கனரக வாகனங்கள் மூலமாக சரள்மண் திருட்டு நடைபெற்றுள்ளது. இந்த நிலையில், பெருமளவில் சரள்மண் திருடப்பட்டிருப்பதை அறிந்த அப்பகுதி மக்கள் மற்றும் பாஜகவினர் மணல் திருட்டு நடைபெற்ற பகுதிக்கு சென்று குமாரசித்தன்பட்டி கிராம நிர்வாக அலுவலர் கணேஷ் குமார் என்பவரை செல்போனில் தொடர்பு கொண்டு இந்த சரள் மண் கொள்ளை பற்றி கேட்டுள்ளனர். அதற்கு விஏஓ கணேஷ் குமார், "தாசில்தாரிடம் சொல்லிருக்காங்க.. தாசில்தாரிடம் சொல்லிருக்காங்க... என்று ஆரம்பித்த விஏஓ, "தன்னிடம் முறையாக அனுமதி பெறவில்லை என்றும், மணல்கொள்ளையை தடுத்து நிறுத்தினால் உடனடியாக எம்.எல்.ஏ, தாசில்தார், பேரூராட்சி தலைவர் எல்லாரும் கால் பண்றாங்க... அதுக்குமேல நான் என்ன பண்ண முடியும்", "நீங்க இப்ப வந்து கேக்குறீங்க மணல் திருடும்போதே தடுக்கனும்" என்றும் அலட்சியமாக பேசியிருக்கிறார்.
அதுமட்டுமின்றி, தன்னால் எதுவும் செய்யமுடியாது என்பதைப்போல ஒரு அரசு அதிகாரியான கிராம நிர்வாக அலுவலரே... "நீங்க இப்ப மணல் திருட்டை தடுக்கனும்னா ரோட்டுக்கும் - மண் அள்ளுகின்ற இடத்திற்கும் இடையில் வாகனங்கள் செல்ல முடியாதவாறு வழியில் குழி தோண்டிவிடுங்கள்" என்று கூறியிருப்பது... அவருடைய அலட்சியத்தையும், அச்சத்தையும் காட்டுகிறது. ஆடியோ-வின் கடைசியில்.... "முதல தெரியாம நடக்கும், தெரிஞ்சு நாங்களா போய் கேட்டோம்னா அப்புடி, இப்புடினு சொல்லிருவாங்க...அதுக்குமேல நாங்க என்ன செய்றது????" தற்போது இந்த குமாரசித்தன்பட்டி விஏஓ கணேஷ் குமாரின் இந்த ஓபன்டாக் ஆடியோ இணையத்தில் வேகமாக பரவி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்த செல்போன் ஆடியோ மூலம்... மணல் கொள்ளையை தடுக்க முயன்ற விஏஓ-க்கு எம்.எல்.ஏ முதல் தாசில்தார் வரை மேலதிகாரிகளின் அச்சுறுத்தல் இருந்திருக்கக்கூடும் என்பது தெளிவாக புலப்படுகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் மணல் கொள்ளை விவகாரத்தில் தூத்துக்குடி: முறப்பநாடு விஏஓ படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அனைவரது மனதிலிருந்து மறையாமல் இருக்கும் நிலையில், இதுபோன்று மணல் கொள்ளையை தடுக்க முயன்றும் அரசியல்வாதிகள் மற்றும் மேலதிகாரிகளினால் பல கிராம நிர்வாக அலுவலர்கள் தங்களது பணியை சுதந்திரமாக செய்ய முடிவதில்லை. ஆகையால், தமிழக அரசும், கனிமவளத்துறை அதிகாரிகளும் உடனடியாக இந்த சரள்மண் கொள்ளை விவகாரத்தில் தலையிட்டு விசாரணை மேற்கொண்டு மணல் கொள்ளையில் ஈடுபட்டவர்களையும், உடந்தையாக செயல்பட்டவர்கள் மீதும் தக்க நடவடிக்கை எடுப்பதோடு மட்டுமின்றி தமிழகம் முழுவதும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பணிச்சுதந்திரமும், பாதுகாப்பும் வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.