எட்டையாபுரம் அருகே ரேஷன் கடை பெண் ஊழியர் மீது தாக்குதல் - தாக்கியவருக்கு தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்!



தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகேயுள்ள வாலாம்பட்டியை சேர்ந்த மகேஷ் குமார் என்பவரது மனைவி முத்துமாரி (28). இவர் நெல்லை மாவட்டம் மேலநத்தம் கிராமத்தில் உள்ள ரேஷன் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார். இன்று வழக்கம் போல ஊரிலிருந்து வேலைக்கு சென்றுள்ளார். எட்டையாபுரம் பேருந்து நிலையத்தில் பஸ் நின்ற போது, நெல்லை தாராபுரம் அழகனேரியை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவர் அரிவாளை காட்டி மிரட்டி,கீழே இறங்கி தனது பைக்கில் அழைத்து சென்றுள்ளார். 




தூத்துக்குடி மதுரை -  நெடுஞ்சாலையில் உள்ள தனியார் திருமணம்  மண்டப முன்பு  முத்துமாரியை, சுப்பிரமணியன்  தாக்கியதாக கூறப்படுகிறது. அப்போது அந்த பகுதியில் இருந்த பொதுமக்கள் சுப்பிரமணியனை சுற்றி வளைத்து தர்ம அடி கொடுத்து எட்டையாபுரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். சுப்பிரமணியன் தாக்கியதில் முத்துமாரிக்கு காயம் ஏற்பட்டுள்ளது. 




அதேபோன்று பொதுமக்கள் அடித்ததில் சுப்பிரமணியனுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் எட்டையாபுரம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. மேல் சிகிச்சைக்காக சுப்பிரமணியனை  தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும்,முத்துமாரியை கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்துள்ளனர்.


இச்சம்பவம் குறித்து எட்டயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



ரேஷன் கடையில் பொருட்கள் போடுவதில் ஏற்பட்ட தகராறு காரணமாக தன்னைத் தேடி வந்து தாக்கியதாக முத்துமாரி தரப்பும்,



கடந்த இரண்டு ஆண்டுகளாக தனக்கு முத்துமாரிக்கும் பழக்கம் உண்டு, அவருக்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்து உள்ளதாகவும், தினந்தோறும் தான்தான் முத்துமாரியை வேலைக்கு அழைத்துச்  செல்வதாகவும்,  தங்களுக்குக்கு சில தினங்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக பிரச்சனை இருந்து வந்ததாகவும், காலையில் வழக்கம் போல தான் அழைக்க வந்த போது  முத்துமாரியின் உறவினர்கள் தன்னை வெட்டி விட்டதாக சுப்பிரமணியன் தரப்பும் தெரிவித்துள்ளனர்.




இருதரப்பு கூறும்  புகார்களை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 



இந்த சம்பவம் எட்டையாபுரத்தில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.