"தீவிரவாதியைப் போல எங்களை பிடிச்சிட்டு வந்துருக்காங்க... குடிக்க தண்ணியும் கொடுக்கல.. சாப்பாடும் கொடுக்கல... : எங்களுக்கு ஏதாவதுனா தமிழக அரசு தான் பொறுப்பு" - புதூரில் இரவு 10 மணி வரை அங்கன்வாடி பணியாளர்களை போலீசார் சிறைபிடித்ததால் பரபரப்பு!




பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் உள்ள அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தினர் ஏராளமானோர் சென்னையில் உள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் துறை இயக்குநர் அலுவலகத்திற்கு பெருந்திரளாக சென்று தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுவை துறை இயக்குநரிடம் அளிக்கவுள்ள நிலையில், அதற்காக இன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சென்னை நோக்கி செல்கின்றனர். இதேபோன்று தூத்துக்குடி மாவட்டம் புதூர் வட்டாரத்திலிருந்து சென்னைக்கு வேனில் புறப்பட்ட அங்கன்வாடி பணியாளர்கள் சுமார் 25-க்கும் மேற்பட்டோரை சென்னைக்கு செல்லவிடாமல் தடுத்து எந்தக் காரணமும் கூறாமல் மாலை 4:00 மணி முதல் போலீசார் அலைக்கழித்தோடு மட்டுமன்றி, புதூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அங்கன்வாடி ஊழியர்களுக்கு இரவு 10 மணி வரை குடிநீரும், உணவும் வழங்காமல் சிறை பிடித்து வைத்திருந்தனர். எதற்காக எங்களை செல்லவிடாமல் தடுத்து இங்கு அடைத்து வைத்துள்ளீர்கள் என அங்கன்வாடி ஊழியர்கள் போலீசாரிடம் கேட்டதற்கு, "நீங்கள் சென்னை செல்லக்கூடாது... மேலிடத்து உத்தரவு" என்று மட்டும் கூறிச் சென்றதாக சொல்லப்படுகிறது. மேலும், சென்னையில் நாளை தமிழ்நாடு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் துறை இயக்குநரிடம் தங்களது கோரிக்கைகள் தொடர்பாக மனு அளிக்க சென்ற 25-க்கும் மேற்பட்ட பெண்கள் எவ்வித சரியான காரணமும் சொல்லப்படாமல் போலீசாரால் தனியார் திருமண மண்டபத்தில் சிறை பிடித்து வைக்கப்பட்ட சம்பவம் அங்கன்வாடி பணியாளர்களுக்கு மட்டுமின்றி அவர்களது குடும்பத்தினருக்கும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. பின்னர், இரவு 10 மணியளவில் சிறை பிடித்து வைக்கப்பட்ட அங்கன்வாடி ஊழியர்களிடம் பெயர், முகவரி, கையொப்பம் பெற்று போலீசார் விடுவித்துள்ளனர்....


இதுகுறித்து அங்கன்வாடி ஊழியர்கள் செய்தியாளர்களிடம் பேசிய போது;



"புதூர் வட்டாரத்தில் இருந்து அங்கன்வாடி பணியாளர்களாகிய நாங்கள் ஒரு நியாயமான கோரிக்கையை தமிழ்நாடு அரசு தெரிவிப்பதற்காக கிளம்பி வந்தோம், போராட்டத்திற்காக போகவில்லை அப்படி இருந்தும் எங்களை செல்லும் வழியிலேயே போலீசார் பிடித்து முதலில் மாசார்பட்டி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்... பின்னர் புதூர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து பின் அங்கிருந்து இங்குள்ள திருமண மண்டபத்தில் வந்து எங்களை அடைத்துவிட்டார்கள். நாங்கள் யாரையும் கொல்வதற்கோ, வெட்டுவதற்கோ போகவில்லை.. நாங்கள் எங்கள் நியாயமான கோரிக்கையை கொண்டு செல்ல சென்றோம். மாலை 6 மணிக்கு எங்களை கொண்டு வந்து உள்ளே அடைத்த காவல்துறையினர் தற்போது இரவு 10 மணிக்குத்தான் வெளிய அனுப்புகிறார்கள். இப்போது நாங்கள் எங்கள் வீட்டிற்கு செல்வதற்கு கூட பஸ் கிடையாது. இப்ப வரை எங்களுக்கு குடிப்பதற்கு தண்ணீர் கொடுக்கவில்லை... உணவும் கொடுக்கவில்லை... நாங்களும் ஒரு சமூக நல பணியாளர் தான் எங்களை எவ்வளவு இழிவாக நடத்தியதற்கு தமிழக அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது?, நாங்கள் அந்த அளவிற்கு மன உளைச்சலுக்கு ஆளாக இருக்கிறோம்... எங்களுக்கு ஏதாவது ஆகிவிட்டால் அதற்கு தமிழ்நாடு அரசுதான் முழு பொறுப்பு.. நாங்க அவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கோம். "நாங்கள் பயப்படவில்லை, ஏன் பயப்படனும்.. எங்க சொந்த கோரிக்கை இது, இத சொல்றதுக்கு ஊர் மக்கள் வர முடியுமா.. போலீஸ்காரங்க என்ன நெனச்சுக்கிட்டு இருக்காங்க எங்கள.. இடையில மடக்கி எங்களை எதோ தீவிரவாதியை பிடிச்ச மாதிரி பிடிச்சிட்டு இருக்காங்க... நாங்க அணுகுண்டு ஒன்னும் கொண்டு போகவில்லையே.. எங்களை வரவிடாமல் தடுத்ததே சென்னையிலிருந்து தான் தடுக்குறாங்க.. அவங்க முறையா செஞ்சா நாங்க ஏன் போறோம்... 5 மணி நேரமா எங்களை ஏன் இவ்வளவு டார்ச்சர் பண்ணனும்?" என்று ஆக்ரோஷத்தோடு தங்களது கோபத்தை வெளிப்படுத்திப் பேசினர்.