எட்டையபுரம் அருகே காட்டுப்பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் எரிந்த நிலையில் கண்டெடுப்பு - மாவட்ட எஸ்.பி. நேரில் சென்று விசாரணை!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள எட்டையபுரத்திலிருந்து - கோவில்பட்டி செல்லும் பிரதான சாலையில் உள்ள காட்டுப்பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் பாதி எரிந்த நிலையில் கிடப்பதாக எட்டையபுரம் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து உடனடியாக அங்கு விரைந்து சென்ற போலீசார் சடலத்தை பார்வையிட்டு தடயவியல் நிபுணர்களை வரவழைத்து ஆய்வு மேற்கொண்டு விசாரணையில் ஈடுப்பட்டு வருகின்றனர். மேலும், சம்பவ இடத்திற்கு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் நேரில் சென்று எரிந்த நிலையில் கிடந்த ஆண் சடலத்தை பார்வையிட்டு அப்பகுதியில் ஏதேனும் தடயங்கள் உள்ளனவா? என்று மாவட்ட எஸ்.பி. உட்பட தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அதுமட்டுமின்றி, சடலமாக கண்டெடுக்கப்பட்ட நபர் குறித்த விபரங்கள் தற்போது வரை தெரிய வராததால், இது கொலையா? தற்கொலையா? என்பதை முடிவு செய்வதிலும், விசாரணை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதிலும் போலீசாருக்கு பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், இங்கு எரிந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட நபர் கொலை செய்யப்பட்டு கொலையாளிகளால் இங்கு வந்து எரித்திருக்கக்கூடும் என்ற கோணத்தில் விசாரணை தொடங்கி உள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் சில தகவல் தெரிவிக்கின்றனர். மேலும் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் உடனடியாக சரலமாக கண்டெடுக்கப்பட்டுள்ள நபர் கொடுத்த விவரங்களை சேகரித்து விசாரணையை துரிதப்படுத்த வேண்டும் என்று விளாத்திகுளம் டிஎஸ்பி அசோகன் தலைமையிலான போலீசாருக்கு உத்தரவிட்டார்.