விளாத்திகுளத்தில் விபத்தை தடுக்க நெடுஞ்சாலை துறையிடம் அதிமுகவினர் கோரிக்கை!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் - வேம்பார் சாலையில் தீயணைப்பு நிலையம் அருகே அடிக்கடி வாகன விபத்துக்கள் ஏற்பட்டு பல உயிரிழப்புகள் மற்றும் உடல் ஊனங்கள் ஏற்படுவது தொடர் கதையாகி வருகிறது. இதனால் அப்பகுதியில் ஏற்படும் விபத்துகளை தவிர்க்க விளாத்திகுளம் - வேம்பார் சாலையில், தீயணைப்பு நிலையம் அருகில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்றும், அப்பகுதியில் விபத்து அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என்றும் விளாத்திகுளம் அதிமுக கிழக்கு ஒன்றியச் செயலாளர் இராமச்சந்திரன் தலைமையில் சட்டமன்ற தொகுதி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் விளாத்திகுளம் நெடுஞ்சாலைத்துறை பொறியாளரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. மேலும் நெடுஞ்சாலை துறை அதிகாரியிடம், சமீபத்தில் நடந்த விபத்தில் கூட இருவருக்கு கால் எலும்பு முறிவு ஏற்பட்டதைக்கூறி உடனடியாக அங்கு வேகத்தடை அமைத்து விபத்துக்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதில் விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் மகேஷ், மத்திய ஒன்றிய செயலாளர் பால்ராஜ், கிழக்கு ஒன்றிய எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் சண்முகசாமி, நகரத் துணைச் செயலாளர் ஆசைத்தம்பி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச்செயலாளர் ஆனந்த் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு கோரிக்கை மனு அளித்தனர்.