எட்டயபுரம் காவல் நிலையம் அருகே ஐயப்ப பக்தர்கள் வந்த சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து - அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 6 ஐயப்ப பக்தர்கள் உட்பட 7 பேர் காயம்.




தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள சிந்தலக்கரையில் இருக்கும் வெட்காளியம்மன் திருக்கோவிலில் அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் விளந்தை பகுதியைச் சேர்ந்த குருசாமி கணேசன் தலைமையில் 20 ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர் ‌. பின்னர் அங்கிருந்து அவர்கள் வந்த சுற்றுலா வேனில் திருச்செந்தூருக்கு கிளம்பியுள்ளனர். வேனை  ரஞ்சித்குமார் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். வேன்  எட்டயபுரம் காவல் நிலையம் அருகே தூத்துக்குடி - மதுரை  நெடுஞ்சாலை விலக்கு பகுதியில் சென்றபோது குறுக்கே வந்த பைக் மீது மோதாமல் இருக்க  வேன் டிரைவர் பிரேக் பிடித்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக  நிலைதடுமாறி வேன் சாலையின் நடுவே கவிழ்ந்தது. உடனடியாக போலீஸார் அங்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். விபத்தில் வேனில் இருந்த ராஜேந்திரன்(41), மயில்வாகனன்(59) உள்ளிட்ட 6 பேருக்கு காயம் ஏற்பட்டது. மேலும், சாலையின் குறுக்கே மோட்டார் சைக்கிளில் வந்த முருகன் என்பவரும் காயமடைந்தார். அவர்களுக்கு எட்டயபுரம் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு, மேல்சிகிச்சை தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.



சாலையில் கவிழ்ந்த வேனை ஜேசிபி இயந்திரம் மூலம் அப்புறப்படுத்தப்பட்டது. விபத்து குறித்து எட்டயபுரம்  போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.