விளாத்திகுளத்தில், தமிழக ஏர் உழவன் அனைத்து விவசாயிகள் சங்கம் சார்பில் கலந்தாய் கூட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தனியார் திருமண மண்டபத்தில் "தமிழக ஏர் உழவன் அனைத்து விவசாயிகள் சங்கத்தின் கலந்தாய்வு கூட்டம்" நிறுவனத் தலைவர் ராஜேஷ் தலைமையில் நடைபெற்றது. இன்று நடைபெற்ற இந்த கலந்தாய்வு கூட்டத்தில் ஏராளமான விவசாயிகள் மற்றும் மாட்டு வண்டி தொழிலாளர்கள் கலந்து கொண்ட நிலையில் விவசாயிகள் நலன் தொடர்பாக பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன்படி,
* பம்பை - அச்சங்கோவில் - வைப்பாறு நதியிணைப்பு திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும்.
* தமிழர் பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் வகையில் தமிழர் ஏர்பூட்டும் விழா நடத்துதல்.
* விளாத்திகுளம் வைப்பாற்றில் அரசு சார்பில் மாட்டு வண்டி மணல் குவாரி அமைக்க வேண்டும்.
* வெம்பூரில் சிப்காட் அமைக்க வேளாண் நிலங்களை கையகப்படுத்துவதை உடனடியாக கைவிட வேண்டும்.
* வைப்பாற்றின் இரு கரைகளையும் பலப்படுத்தி, சீமை கருவேல மரங்களை முற்றிலுமாக அகற்றிட வேண்டும்.
* கால்நடை வளர்ப்பவர்களுக்கு அடையாள அட்டையுடன், மாத ஊக்கத்தொகை வழங்கிட வேண்டும்.
* விவசாயிகளுக்கு காப்பீடு வழங்கும் திட்டத்தை அரசே செயல்படுத்த முன்வர வேண்டும்.
* மழைக்காலத்திற்கு முன்பே கரிசல் பகுதியில் உள்ள கண்மாய், ஓடை, வடிகால்களை தூர்வாரி சீரமைப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* தூத்துக்குடி மாவட்டத்தில் ஓடைகள் மற்றும் நீர்நிலைகளை ஆக்கிரமித்து நிறுவப்பட்டுள்ள தனியார் காற்றாலை நிறுவனத்தின் மின்கம்பங்களை உடனடியாக அகற்ற நடவடிக்கை வேண்டும்.
-என்பன போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் இக்கூட்டத்தில் மாநில கருத்தாளர் வியனரசு, ஒருங்கிணைப்புக்குழு மாவட்ட செயலாளர் அருமைராஜ், வடக்கு மாவட்டத் தலைவர் முனியசாமி, வடக்கு மாவட்ட துணைத் தலைவர் பழனிச்சாமி, தூத்துக்குடி ஒருங்கிணைப்பாளர் கணேசன், விருதுநகர் மாவட்டத் தலைவர் ராமர், ஒன்றிய தலைவர் காளிமுத்துராஜ், விளாத்திகுளம் நகர தலைவர் ஹைகோர்ட் மஹாராஜா, மாவட்ட பொறுப்பாளர் ராகேஷ் உட்பட விவசாயிகள், மாட்டு வண்டி தொழிலாளர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.