விளாத்திகுளத்தில் ஆனிக் கொடை விழாவை முன்னிட்டு நடைபெற்ற மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம் : கண்டு ரசித்த மக்கள்!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பாரதி தெருவில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர், ஸ்ரீ காளியம்மன், ஸ்ரீ பைரவர், ஸ்ரீ கருப்பசாமி திருக்கோவிலின் ஆனி மாதக் கொடை விழாவை முன்னிட்டு, மாபெரும் மாட்டுவண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. இதில் திருநெல்வேலி, இராமநாதபுரம்,மதுரை, தூத்துக்குடி, சிவகங்கை,தேனி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான ஜோடி மாடுகள் போட்டியில் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்தன. இப்போட்டியை தமிழர் விடுதலை களம் கட்சியின் நிறுவனத் தலைவர் ராஜ்குமார் பாண்டியன் மற்றும் விளாத்திகுளம் முன்னாள் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் முனிய சக்தி இராமச்சந்திரன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இதில் சிறிய மாடுகளுக்கு 6 மைல் தூரமும், பூஞ்சிட்டு மாடுகளுக்கு 5 மைல் தூரமும் என இரு பிரிவுகளாக நடைபெற்றது. போட்டியில் சீறிப்பாய்ந்து சென்ற காளைகளை நீண்ட தூரம் ஏராளமான பொதுமக்கள் சாலையின் இரு புறமும் நின்று கண்டு ரசித்தனர். இதைத்தொடர்ந்து போட்டியில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்கள் மற்றும் ஓட்டி வந்த சாரதிகளுக்கு விழா கமிட்டியின் சார்பில் பரிசுத்தொகை வழங்கி கௌரவிக்கப்பட்டது.