விளாத்திகுளம் அரசு மருத்துவமனை சுகாதாரமற்ற சூழ்நிலையில் இருப்பதாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்ததால், புகார் கொடுத்தவரின் மகளின் பிரசவத்தை அலைக்கழிப்பு செய்யும் அரசு மருத்துவர்!
மருத்துவரிடம் மன்னிப்பு கேட்டால் மட்டுமே பிரசவம் பார்ப்போம் என்று செவிலியரை வைத்து மிரட்டும் அரசு மருத்துவர்...
தங்களது மருத்துவமனையில் மட்டுமே மருந்துகளை வாங்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதாக மருத்துவர் மீது பொதுமக்கள் புகார்!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியை சேர்ந்த மந்திரமுத்து என்பவர் சில நாட்களுக்கு முன்பு தனது மகளான சைனி எலிசபெத் என்பவரை பிரசவத்திற்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார், அரசு மருத்துவமனையில் உள்ள படுக்கை அனைத்துமே சுத்தமில்லாமல், ரத்தக்கரையாகவும் அழுக்கு படிந்தும், அதேபோல் கழிப்பறைகளும் உள்ளே நுழைய முடியாத அளவிற்கு துர்நாற்றம் வீசுவதாக மருத்துவர் சுரேஷ்குமாரிடம் மந்திரமுத்து புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரை மருத்துவர் சுரேஷ்குமார் பெரிதும் கண்டு கொள்ளாமல் இருந்துள்ளார், இதனை அடுத்து மந்திரமுத்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் whatsapp புகார் எண்ணுக்கு புகார் தெரிவித்துள்ளார், அந்தப்புகார் அரசு மருத்துவர் சுரேஷ்குமார்க்கு விசாரணைக்கு வந்துள்ளது.
இந்த நிலையில் மந்திரமுத்து மகள் சைனி எலிசபத்தின் பிரசவம் இன்று காலை 6 மணிக்கு நடப்பதாக இருந்த நிலையில், மருத்துவர் சுரேஷ் குமார் எனக்கு அவசாரமாக வெளியில் வேலை உள்ளது, நான் வரும்போது தான் வருவேன், அப்போதுதான் பிரசவம் பார்க்க முடியும் என்று கூறியதாக கூறப்படுகிறது, இதுகுறித்து மந்திரமுத்து பிரசவ அறையில் உள்ள செவிலியரிடம் கேட்டபோது, நீங்கள் மருத்துவர் சுரேஷ்குமார் மீது மாவட்ட ஆட்சியர் எண்ணிறக்கு புகார் தெரிவித்ததால் மருத்துவர் சுரேஷ்குமாரிடம் மன்னிப்பு கேட்டால் மட்டுமே உங்கள் பெண்ணிற்கு பிரசவம் பார்க்க முடியும் என்று கூறியதாக கூறப்படுகிறது.
அது மட்டுமல்லாமல் விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் முக்கியமான மருந்துகள் இல்லாததால் அந்த மருந்துகளை, மருத்துவர் சுரேஷ்குமார் விளாத்திகுளத்தில் நடத்தி வரும் SK கிளினிக்கில் மட்டும் வாங்க வேண்டும் என்று மருத்துவர் கட்டாயப்படுத்துவதாக மந்திரமுத்து புகார் கூறியுள்ளார்.
எனவே மருத்துவமனையை முறையாக சுத்தம் செய்யவும், தனது மகளின் பிரசவத்தை நல்லபடியாக செய்து தரவேண்டும் என்று மந்திரமுத்து அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
அதேபோல் விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில், மருத்துவமனை கணக்குப்படி மருத்துவர்கள் இரவு,பகலாக இருப்பதாக கூறப்படுகிறது, ஆனால் இரவு நேரங்களில் மருத்துவர்கள் மருத்துவமனையில் இருப்பதில்லை என்றும், ஒரு அவசர சிகிச்சைக்கு வந்தால் 108 வாகனம் மூலம் தூத்துக்குடி,கோவில்பட்டி உள்ளிட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பதாகவும், இங்கு ஆட்சியாளர்கள் மாறினாலும் விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் உள்ள பல்வேறு பிரச்சனைகள் இன்னும் தீர்க்கப்படவில்லை என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.