எட்டையாபுரம் அருகே தனியார் பள்ளி வாகனத்தின் அவசரக் கதவு திறந்ததில் ஐந்து வயது சிறுமி தவறி விழுந்து படுகாயம்...
தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் அருகே தெற்கு செமப்புதூரைச் சேர்ந்த லட்சுமணன்–காவியா தம்பதியரின் 5 வயது மகள் பவித்ரா லெட்சுமி . இவர் கீழ ஈரால் பகுதியில் உள்ள “ ஆக்ஸிலியம் ” மெட்ரிகுலேஷன் பள்ளியில் யுகேஜி படித்து வருகிறார்.இந்நிலையில் இன்று மாலை பள்ளி முடிந்து பள்ளி வாகனத்தில் வீட்டிற்கு திரும்பியுள்ளார். வாலம்பட்டி கிராமத்தின் அருகே பள்ளி வாகனம் சென்று கொண்டிருந்த போது, வாகனத்தில் இருந்த அவசர வழி கதவு திடீரென திறந்ததால்,சிறுமி பவித்ரா லெட்சுமி வாகனத்தில் இருந்து தவறி விழுந்து உள்ளார். ஆனால் இதனை கவனிக்காமல் பள்ளி வாகன ஓட்டுனர் வாகனத்தை எடுத்துச்சென்றதாக கூறப்படுகிறது.
அப்போது இதனைப்பார்த்து அருகில் இருந்தவர்கள் காயமடைந்து கீழே கிடந்த சிறுமி பவித்ரா லட்சுமியை தூக்கி கீழஈரால் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர், மேல் சிகிச்சைக்காக கோவில்பட்டி தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு பவித்ரா அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து தகவல் கிடைத்ததும் எட்டையாபுரம் காவல் நிலைய போலீசார் பள்ளி வாகனத்தை காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தது மட்டுமின்றி பள்ளி வாகன ஓட்டுநர் மரியமிக்கில் (வயது 20), தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பள்ளி வாகனத்தின் அவசரக் கதவு திறந்தது எப்படி? சரிவர பூட்டாமல் இருந்ததா? அல்லது சிறுமி தெரியாமல் திறந்தாரா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி வாகனத்தின் அவசரக் கதவு திறந்து மாணவி விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.