விளாத்திகுளம் அருகே கோவில் கொடை விழாவை முன்னிட்டு நடைபெற்ற மாட்டுவண்டி பந்தயம்!



தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகேயுள்ள ஆற்றங்கரை கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் திருக்கோவில் கொடை விழாவை முன்னிட்டு மாபெரும் மாட்டுவண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. சிறிய மாடு மற்றும் பூஞசிட்டு என இரு பிரிவுகளாக நடைபெற்ற இந்த மாட்டு வண்டி போட்டியில் திருநெல்வேலி, இராமநாதபுரம், விருதுநகர், மதுரை, தேனி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான ஜோடி மாடுகள் கலந்து கொண்டன.  இதில் தூத்துக்குடி மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மாட்டு வண்டிகள் முதல் பரிசினை வென்றது. கிராமத்தின் கோவில் கொடை விழாவை முன்னிட்டு விளாத்திகுளம் பகுதியில் நடைபெற்ற இந்த மாபெரும் மாட்டு வண்டி பந்தயத்தில் சீறிபாய்ந்த காளைகளை மாட்டு வண்டி பந்தய ரசிகர்கள் சாலையின் இருபுறமும் கூடியிருந்து ஆர்வமுடன் கண்டு களித்தனர். பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் வெற்றி பெற்ற மாட்டு வண்டி உரிமையாளர்களுக்கும், வண்டிகளை ஓட்டி வந்த சாரதிகளுக்கும் பொன்னாடை போர்த்தி பரிசுத்தொகை மற்றும் பரிசுக்கோப்பை வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.