விளாத்திகுளத்தில் வருவாய் துறை சார்பில் நடத்தப்பட்ட மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தின் 7-ஆம் நாள் திருவிழா : வாழைமரம், தோரணம் & வண்ண விளக்குகளுடன் ஜொலித்த வட்டாட்சியர் அலுவலகம்!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வருவாய் துறையினர் சார்பில், விளாத்திகுளத்தில் அமைந்துள்ள 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தின் சித்திரை திருவிழாவின் 7-ஆம் நாள் திருவிழாவானது வெகு விமர்சையாக நடைபெற்றது. வருவாய் துறையினர் சார்பில் இன்று 7-ஆம் நாள் திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகத்தின் வாயிலில் வாழைமரங்கள் கட்டப்பட்டு, ஒளிர் வண்ண விளக்குகள் ஒளிர விடப்பட்டு வட்டாட்சியர் அலுவலகம் திருவிழா கோலத்தில் ஜொலித்து காட்சியளித்தது. மேலும் திருக்கோவிலில் விளாத்திகுளம் வட்டாட்சியர் இராமகிருஷ்ணன், துணை வட்டாட்சியர் மற்றும் அதிகாரிகள் பரிவட்டம் கட்டிக்கொண்டு நடராஜர் எழுந்தருளிய சுவாமிகளின் சப்பரத்தினை இழுத்து நகர்வலம் வந்தனர். இதில் விளாத்திகுளம் வருவாய் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் தங்களது குடும்பங்களுடன் வந்து சாமி தரிசனம் செய்து சென்றனர்.