விளாத்திகுளம் BDO வாகனம் மோதி 68 வயது விவசாயி பலி - போலீசார் விசாரணை!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மேல்மாந்தை கிராமத்தில் இன்று ஆய்வு பணிகள் மேற்கொண்ட விளாத்திகுளம் வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாசன் ஆய்வுப் பணிகளை முடித்துவிட்டு இரவு விளாத்திகுளம் நோக்கி தனது அலுவலக வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். இந்த வாகனத்தை உமையணன்(55) என்ற ஓட்டுநர் ஓட்டி வந்த நிலையில், எம்.குமாரசக்கணபுரம் கிராமத்தில் உள்ள பேருந்து நிறுத்தம் அருகே வந்து கொண்டிருந்தபோது அங்கு சாலையை கடக்க முயன்ற அதே கிராமத்தைச் சேர்ந்த குமராண்டி என்பவரின் மகனான 68 வயது விவசாயி லிங்குசாமியின் மீது இந்த கார் மோதியதில், தூக்கி வீசப்பட்ட விவசாயி லிங்குசாமி பலத்த காயமடைந்துள்ளார். இதைத்தொடர்ந்து விபத்து ஏற்படுத்திய வட்டார வளர்ச்சி அலுவலரின் வாகனத்திலேயே விபத்து சிக்கிய முதியவர் லிங்குசாமியை விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு உடனடியாக கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து விபத்தில் உயிரிழந்த 68 வயது விவசாயி லிங்குசாமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விபத்து தொடர்பாக சூரங்குடி காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.