விளாத்திகுளம் அருகே கடலில் 18 வயது சிறுவன் மூச்சுத்திணறி உயிரிழப்பு : கடலோர போலீசார் விசாரணை...!
இராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சி மடம் அருகே உள்ள நாலுபனை கிராமத்தைச் சேர்ந்த ஐயப்பன் - சாந்தி தம்பதியினரின் மகனான முகிலன் என்ற 18 வயது சிறுவன் வேம்பாரில் உள்ள அவரது உறவினர் வசந்த் என்பவரின் வீட்டில் தங்கி கடலுக்கு தொழிலுக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில் வழக்கம் போல இன்று காலை 6 மணி அளவில், வேம்பாரைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவர் அது படகில் அங்குள்ள கடலுக்கு சங்கு குளிக்கச் சென்றதாக சொல்லப்படும் சிறுவன் முகிலன் படகில் அமர்ந்திருந்த போது சிறுவனுக்கு காது மற்றும் மூக்கில் இரத்தம் வந்ததோடு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதைஅடுத்து உடனிருந்த மீனவர்கள் முகிலனை கடலில் இருந்து வேம்பார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு சிறுவன் முகிலனை பரிசோதனை செய்த போது அங்கிருந்த மருத்துவர்கள் முகிலன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். பின்னர் அங்கு சென்ற வேம்பார் கடலோர காவல் படை போலீசார் சிறுவனின் உடலை பிரேத பரிசோதனைக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சங்க குளிக்க சென்று உயிரிழந்ததாக சொல்லப்படும் சிறுவன் முகிலன், AIR COMPRESSOR சிலிண்டர்களை பயன்படுத்தி கனவா மீன் பிடித்துக் கொண்டிருந்த போது மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்திருக்க கூடும் என அப்பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் தகவல் தெரிவிக்கின்றனர். எனவே கடலுக்குச் சென்று பரிதாபமாக உயிரிழந்த 18 வயது சிறுவன் முகிலன் சங்கு குளிக்கச் சென்று உயிரிழந்தாரா? அல்லது AIR COMPRESSOR சிலிண்டரைக் கொண்டு கனவா மீன் பிடிக்கச் சென்றுதான் உயிரிழந்தாரா? என்பதை உறுதி செய்ய வேம்பார் கடலோர காவல் படை போலீசார் உடன் சென்ற மீனவர்களிடம் உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்பதும் அப்பகுதியைச் சேர்ந்த மீனவர்களின் கோரிக்கையாக உள்ளது.