விளாத்திகுளம் அருகே 101 பெண்கள் மாவிளக்கு எடுத்து விமர்சையாக நடைபெற்ற சப்பரத் தேர்ப்பவனி : ஏராளமான பொதுமக்கள் தரிசனம்!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வடக்குச்செவல் கிராமத்தில் அமைந்துள்ள இந்து நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன், ஸ்ரீ செல்வ மஹா கணபதி, ஸ்ரீ வைகுண்ட பெருமாள் கோவிலின் பொங்கல் உற்சவ விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதையொட்டி, அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா, சிறப்பு பூஜைகள் செய்து பால்குடம் எடுத்து பக்தர்கள் தங்களது நேர்த்திக் கடன்களை செலுத்தினர். இதைத்தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சப்பரத் தேர்பவனியானது நள்ளிரவில் ஏராளமான பொதுமக்கள் முன்னிலையில், தப்பு-தாளங்கள் முழங்க வானவேடிக்கையுடன் வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் பல வகையான மலர்களால் நன்கு அலங்கரிக்கப்பட்ட சப்பர தேரில் அம்மன் வீதி உலாவாக சென்று பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் 101 பெண்கள் கைகளில் மாவிளக்கு ஏந்தி ஊர்வலமாக வந்து அம்மனை வழிபட்டனர். அதேபோன்று, சப்பரத் தேர் பவனியின் போது வழி நெடுகிலும் பக்தர்கள் பூ, பழம், தேங்காய் உள்ளிட்டவற்றை படைத்து மனமுருகி தரிசனம் செய்தனர். கிராமத்தில் வான வேடிக்கையுடன் கோலாகலமாக நடைபெற்ற இந்த சப்பரத்தேர் பவனியில் நூற்றுக்கணக்கான கிராம மக்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.