விளாத்திகுளம் அருகே மேல்மாந்தை கிராமத்தில், கோவில் கொடை விழாவை முன்னிட்டு "மாபெரும் வடமாடு எருதுகட்டு திருவிழா" : ஏராளமான பார்வையாளர்கள் கண்டுகளிப்பு!தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள மேல்மாந்தை கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பதினெட்டாம்படி கருப்பசாமி மூலிகை வனக்கோவிலில் ஆடி அமாவாசை கொடை விழாவை முன்னிட்டு "மாபெரும் வடமாடு எருதுகட்டு திருவிழா" மிகச்சிறப்பாக நடைபெற்றது. இதில் இராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து காளை மாடுகள் வரவழைக்கப்பட்டன. கொடை விழாவை முன்னிட்டு நடைபெற்ற இந்த எருதுகட்டு திருவிழாவில், மைதானத்தில் முதன்முதலாக பூஜைகள் செய்து கோவில் காளையை அவிழ்த்து விட்டனர். இதைத்தொடர்ந்து போட்டிக்கு வரவழைக்கப்பட்ட காளைகளை ஒவ்வொன்றாக மைதானத்தின் மையத்தில் நீளமான கயிற்றால் கட்டப்பட்டு போட்டிகள் துவங்கப்பட்டது.‌ இதில் பல்வேறு பகுதியைச் சேர்ந்த ஏராளமான மாடுபிடி வீரர்கள் ஆர்வமுடன் பங்கேற்று காளைகளை அடக்கினர். மேல்மந்தை கிராமத்தில் முதன்முதலாக கோவில் கொடை விழாவை முன்னிட்டு நடைபெற்ற இந்த "வடமாடு எருதுகட்டு திருவிழாவை" காண்பதற்காகவே சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான கிராம மக்கள் மயானத்தை சுற்றிலும் கூடியிருந்து ஆர்வமுடன் மாடுபிடி வீரர்கள் காளைகளை அடக்கியதை கண்டு களித்தனர். பின்னர் போட்டியில் காளைகளை அடக்கி வெற்றி பெற்ற மாடுபிடி வீரர்களுக்கு பரிசு தொகை வழங்கி, பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர். மேலும் எருதுகட்டு திருவிழாவை கண்டுகளிக்க அதிகளவில் பொதுமக்கள் கூடியதன் காரணமாக இப்பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.