விளாத்திகுளத்தில் கலைக் கல்லூரி கட்டுவதற்கான இடத்தினை ஆய்வு செய்த தூத்துக்குடி எம்.பி. கனிமொழி!
தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் இயங்கி வரும் அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டிடம் கட்டுவதற்கான இடத்தை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி, தமிழக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைகள் துறை அமைச்சர் கீதா ஜீவன், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் உட்பட அறநிலையத்துறை அதிகாரிகள் பலர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்திற்கு சொந்தமாக அய்யனார்புரம் கிராமம் அருகே 19 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இடத்தையும், அதேபோன்று விளாத்திகுளம் மதுரை ரோட்டில் பி.எஸ்.என்.எல் அலுவலகம் அருகில் 5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இடத்தையும் பார்வையிட்டு கல்லூரிக்கான ஆய்வகம், விளையாட்டு மைதானம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை கட்டமைப்பு வசதிகளும் அமைவதற்கான தகுந்த இடம் தேர்வு செய்வது பற்றி தூத்துக்குடி எம்.பி. கனிமொழி, மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் மற்றும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலய செயல் அலுவலரிடம் ஆலோசனை நடத்தினார். மேலும், விளாத்திகுளம் அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டிடம் கட்டுவதற்கு தகுந்த இடம் தேர்வு செய்யப்பட்டு விரைவில் கட்டுமானப் பணிகள் தொடங்கவிருப்பதாக அதிகாரிகள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.