விளாத்திகுளத்தில்  சாலை விபத்தில் உயிரிழந்தவரின் உடலை 28 மணி நேரத்திற்கு மேலாக உறவினர்களிடம் ஒப்படைக்காமல் அலைக்கழித்த அரசு மருத்துவமனை நிர்வாகம் : குளிர்சாதன வசதியின்றி ஈ, எறும்பு மொய்க்கும் நிலையில் உடல் வைக்கப்பட்டதால் உறவினர்கள் ஆத்திரம்...!



"விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியின் தலைமை அரசு மருத்துவமனையின் பிரேத பரிசோதனை அறையில் குளிர்சாதன வசதி இல்லாததால் சடலங்கள் அழுகும் வெட்கக்கேடு..."





தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் காமராஜர் நகர் பகுதியைச் சேர்ந்த குருசாமி மற்றும் அவரது மனைவி முனீஸ்வரி (63) ஆகிய இருவரும் நேற்றைய தினம் (15/06/2025) விளாத்திகுளம் தியேட்டர் ஸ்டாப் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கியதில் மூதாட்டி முனீஸ்வரி(63) சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடலை விளாத்திகுளம் காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்வதற்கான பணியாளர்கள் இல்லாத காரணத்தினால், நேற்றைய தினம் விபத்தில் உயிரிழந்த முனீஸ்வரியின் உடலை 28 மணி நேரத்திற்கு மேலாகியும் பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் உடலை ஒப்படைக்காமல் விளாத்திகுளம் அரசு மருத்துவமனை நிர்வாகம் அலைக்கழித்துள்ளனர். அதுமட்டுமின்றி பிரேத பரிசோதனை அறையில் குளிர்சாதன வசதி ஏற்படுத்தாததன் காரணமாக மூதாட்டி முனீஸ்வரியின் உடலின் மீது ஈ, எறும்பு மொய்த்து சடலம் அழுகும் மோசமான நிலைக்குச் சென்றதால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள் உடனடியாக பிரேத பரிசோதனை செய்து உடலை ஒப்படைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அப்போது விளாத்திகுளம் காவல்துறை அதிகாரிகள், போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களை தடுத்து நிறுத்தி உடனடியாக பிரேத பரிசோதனை செய்து மூதாட்டியின் உடலை ஒப்படைக்க நடவடிக்கை எடுப்பதாக பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து அவரது உறவினர்கள் கலைந்து சென்றனர். பின்னர் எட்டயபுரம் அரசு மருத்துவமனையில் இருந்து பிரேத பரிசோதனை செய்யும் பணியாளர்கள் விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு வரவழைக்கப்பட்டு நீண்ட நேரத்திற்குப் பின்னர் சாலை விபத்தில் பலியான முனிஸ்வரியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.



விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியின் தலைமை மருத்துவமனையாக விளங்கும் விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் போதுமான மருத்துவர்கள் மற்றும் மருத்துவ சேவைகள் இல்லை என்ற குற்றச்சாட்டு நீண்ட காலமாக இருக்கக்கூடிய சூழலில் இங்குள்ள பிரேத பரிசோதனை அறையில் குளிர்சாதன வசதி இல்லாததால் இப்பகுதியில் சாலை விபத்துக்கள் மற்றும் தற்கொலை போன்ற சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் உடல்களை பாதுகாப்பாக வைப்பதில் மிகப்பெரிய சிரமம் இருந்து வருகிறது. அதிலும் இம்மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யும் பணியாளர்கள் இல்லாததால் உயிரிழந்தவர்களின் உடல்களை அவர்களது உறவினர்களிடம் ஒப்படைப்பதற்கு மிகவும் காலதாமதம் ஏற்பட்டு வரும் அவலநிலை தொடர்ந்து நீடித்து வருகிறது. 


ஆகையால், விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் உடனடியாக உரிய ஆய்வு மேற்கொண்டு இங்கு போதுமான மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களை நியமிப்பதோடு, பிரேத பரிசோதனை அறையில் குளிர்சாதன வசதி உட்பட மருத்துவமனையில் அனைத்து அடிப்படை கட்டமைப்பு வசதிகளையும் செய்து தர வேண்டும் என்பது விளாத்திகுளம் தொகுதி மக்களின் தலையாய கோரிக்கையாக உள்ளது...