கிராம சாலையை விட மிக மோசமான நிலையில் இருக்கும் சென்னை - கன்னியாகுமரி பிரதான ECR சாலை : அதிகப்படியான விபத்துக்கள் நடந்தும் அலட்சியத்தின் உச்சியில் அதிகாரிகள் : தொடரும் விபத்துக்களை தவிர்க்க துரிதமான நடவடிக்கை மிக அவசியம்!
சென்னையில் இருந்து தொடங்கி புதுச்சேரி, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, இராமநாதபுரம், தூத்துக்குடி வழியாக கன்னியாகுமரி வரை செல்லும் மிக முக்கியமான ECR சாலையில் (NH32) வெளி மாநில சுற்றுலா பயணிகள், யாத்திரை செல்லும் பக்தர்களின் வாகனங்கள் மற்றும் துறைமுகங்கள், உப்பளங்கள், தொழிற்சாலைகளுக்கு செல்லும் வாகனங்கள், பள்ளி, கல்லூரி வாகனங்கள், பொது போக்குவரத்து என நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் பயன்படுத்தி வரும் இந்த பிரதான சாலையில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே வேம்பார் முதல் மேல அரசடி வரை சுமார் 46 கிலோ மீட்டர் ECR முறையான பராமரிப்பு இன்றி மிகவும் சிதலமடைந்து காணப்படுவதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு இடையில் இப்பகுதியை கடந்து செல்கின்றனர்.
இதிலும் குறிப்பாக கடந்த 2023 டிசம்பர் மாதம் பெய்த வடகிழக்கு பருவமழையின் காரணமாக இந்த ECR சாலையில் அமைந்துள்ள வேப்பிலோடை பகுதியில் பெரும்பாலான இடங்களில் சாலைகள் பெயர்ந்து முற்றிலுமாக அடித்துச் செல்லப்பட்டது. இதனால் போக்குவரத்து முற்றிலுமாக இச்சாலையில் துண்டிக்கப்பட்டு அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் மிகவும் அசாதாரணமான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டனர். இதையடுத்து ஊடங்களில் செய்தியை வெளியிட்டதை தொடர்ந்து, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் (NHAI) திட்ட இயக்குநர் ராவுத் மற்றும் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் ஆகியோர் பார்வையிட்டு காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பகுதிகளை இணைக்கும் விதமாக சுமார் 300 மீட்டர் தூரத்திற்கு ஜல்லிக்கற்களையும், மணலையும் கொட்டி சிறிய (1 LANE) பாதையை தற்காலிகமாக அமைத்துக் கொடுத்தனர். ஆனால், பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வரும் இந்த பிரதான ECR சாலையில் அமைக்கப்பட்ட தற்காலிக பாதையை 7 மாதங்களாகியும் சரி செய்யாமல் இருப்பதால் இந்த தற்காலிக பாதை சாலை மட்டத்திலிருந்து 3 அடிக்கும் அதிமாக கீழே இறங்கியதோடு மட்டுமின்றி மேடு பள்ளங்களாக ஜல்லிக்கட்டுகளால் நிரப்பப்பட்ட பகுதியாக காட்சியளிக்கிறது. அதிக அளவு வாகனங்கள் சென்று வரக்கூடிய சாலையில் தரமற்ற முறையில் அமைக்கப்பட்டுள்ள இந்த சிறிய தற்காலிக பாதையால் அதிகப்படியான விபத்துக்கள் ஏற்படுவதோடு, மிகுந்த போக்குவரத்து பாதிப்பும் நிலவி வருகிறது.
விளாத்திகுளம் பகுதியை சுற்றியுள்ள 300க்கும் அதிகமான கிராமப்புறங்களைச் சேர்ந்த மக்களும், அரசு மருத்துவமனைகளில் இருந்து அவசர சிகிச்சைக்காக பரிந்துரை செய்யப்படும் நோயாளிகளும் 108 ஆம்புலன்ஸ் வாகனங்களில் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு
செல்வதற்கு இச்சாலையை மட்டுமே பயன்படுத்த வேண்டி இருப்பதால் இந்தப் படுமோசமான சாலையை கடந்து மருத்துவமனைக்கு செல்வதற்குள் பல உயிரிழப்புகள் ஏற்படுவதாக பொதுமக்கள் வேதனையை தெரிவிக்கின்றனர். மேலும் பகல் நேரங்களிலே இச்சாலையை பயன்படுத்துவதில் மிகவும் சிரமம் இருக்கக்கூடிய சூழலில் இரவு நேரங்களில் குண்டும் குழியுமாகவும், பல இடங்களில் முற்றிலுமாக சாலைகள் பெயர்ந்தும் இருக்கும் இந்த ECR சாலையில் வாகனங்களை ஓட்டிச் செல்வது என்பது மிகப்பெரிய சவாலாகவே இருந்து வருகிறது. இதனால் ஏராளமான விபத்துக்கள் ஏற்பட்டு வாகன ஓட்டிகளுக்கு கை,கால் எலும்பு முறிவு, உயிர் பலி என தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இதன் காரணமாக இரவு நேரங்களில் தூத்துக்குடி செல்லும் வாகன ஓட்டிகள் குளத்தூர், குறுக்குச்சாலை வழியாக கூடுதலாக 20கி.மீ சுற்றி செல்ல வேண்டிய சூழ்நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆட்சியாளர்கள் மற்றும் அதிகாரிகளின் அதீத அலட்சியத்தினால் நாள்தோறும் இந்த மோசமான சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களின் உயிர்கள் அனாமத்தாக போய்க்கொண்டிருக்கின்றன என்பதை துறை சார்ந்த அமைச்சர் மற்றும் முதலமைச்சரின் கவனத்திற்கு செல்கிறதா? அல்லது சென்றும் அவர்களது நடவடிக்கையும் மெத்தனம் தானா? என பொதுமக்களும், இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும் ஆதங்கத்துடன் தெரிவித்துச் செல்கின்றனர்.
எனவே, தமிழ்நாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலையான (NH32) இந்த வேம்பார் - மேல் அரசடி ECR சாலையில் பயணிக்கும் மக்களின் பாதுகாப்பு நலன் கருதி தூத்துக்குடி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி மற்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி மிகத்துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டு படுமோசமான நிலையில் காணப்படும் இச்சாலையை அகற்றிவிட்டு பொதுமக்கள் பாதுகாப்பான வகையில் பயணம் மேற்கொள்ள தரமானதாக சாலை அமைக்க வழிவகை செய்ய வேண்டும் என்பதை இச்சாலையைக் கடக்கும் அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது....