விளாத்திகுளம் அருகே 100க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் சார்பில் மாபெரும் வாக்காளர் விழிப்புணர்வு மனிதச் சங்கிலி & பேரணி நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டத்தில் வருவாய் துறையினர் சார்பில் தொடர்ந்து பல்வேறு வாக்காளர் விழிப்புணர்வு முகாம்கள், பேரணிகள் மூலம் பொதுமக்களிடையே வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இன்று விளாத்திகுளம் வட்டாட்சியர் இராமகிருஷ்ணன் தலைமையிலும், தேர்தல் துணை வட்டாட்சியர் பாலமுருகன் முன்னிலையிலும் நாகலாபுரத்தில் மாபெரும் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் நாகலாபுரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள், விளாத்திகுளம் வருவாய்துறை அதிகாரிகள், அலுவலர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். அதன்படி, நாகலாபுரம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து துவங்கிய இப்பேரணியை விளாத்திகுளம் வட்டாட்சியர் இராமகிருஷ்ணன் கொடியசைத்து துவக்கிவைத்தார். இதைத்தொடர்ந்து கல்லூரி மாணவர்கள் வாக்காளர் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தியவாறு ஊர்வலமாக கல்லூரியை வந்தடைந்தனர். மேலும் இப்பேரணியில் மாணவர்கள் வாக்களிப்பதன் அவசியம் பற்றியும், வாக்குரிமையின் முக்கியத்துவம் பற்றியும் வாக்காளர்கள் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழிநெடுகிலும் இருந்த பொதுமக்களுக்கு வழங்கியும், கோஷமிட்டும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதற்கு முன்பாக நாகலாபுரம் கடைவீதியில் வருவாய் துறையினருடன் கல்லூரி மாணவர்கள் இணைந்து விழிப்புனர்வு ஏற்படுத்தும் விதமாக மனிதச் சங்கிலியாக கைகோர்த்து நின்று வாக்காளர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் கல்லூரியின் முதல்வர் இராமலிங்கம், உதவி ஆய்வாளர் முருகேசன், உடற்கல்வி இயக்குனர் ஆல்டிரின், வணிகவியல் துறை பேராசிரியர் லீலா, தமிழ் துறை பேராசிரியர் முனியசாமி, ICTC ஹலோ சகர் கார்த்திக், நாட்டுநலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் மகேஷ் உட்பட வருவாய்த்துறை அலுவலர்கள், கல்லூரி மாணவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.