வேம்பார் கடற்கரை பகுதியில் மீன் இறங்கும் தளம் பாலம் உடைந்து பெரியளவில் பள்ளம் ஏற்பட்டதால் கன்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்து!





தூத்துக்குடி மாவட்டம்,  விளாத்திகுளம் அருகே வேம்பார் கடற்கரை பகுதியில் இருந்து 500 க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் மூலம் அப்பகுதி மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்று வருகின்றனர். அவர்கள் வசதிக்காக நபார்டு வங்கி உதவியுடன் தமிழக மீன்வளத்துறை மூலம் 10 கோடியே 50 லட்சம் மதிப்பில் மீன் இறங்கும் தளம் கடந்த 2019ம் ஆண்டு பயன்பாட்டிற்கு வந்தது. 



கடலில் பிடித்து வரும் மீன்களை படகுகளில் இருந்து இறக்கி வாகனங்களில் ஏற்றுவதற்கு வசதியாக பாலம் போன்று  அந்த இறங்குதளம் அமைக்கப்பட்டிருந்தது. 




இதற்கிடையில் தொடர்  கடல் அரிப்பு காரணமாக மீன் இறங்கும் தளம் சேதமைடந்து காணப்பட்டது.  இதனை சீரமைக்க கோரி மீன்வளத்துறை அதிகாரிகளிடம் மீனவர்கள் புகார் அளித்தபோதிலும் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. 




இந்நிலையில், இன்று  படகுகளில் வந்த மீன்களை ஏற்றிக் கொண்டு ஒரு கன்டெய்னர் லாரி புறப்பட்டது.

அப்போது, திடீரென பாலம் உடைந்து பெரியளவில் பள்ளம் ஏற்பட்டதால் கன்டெய்னர் லாரி கவிழ்ந்தது. தூத்துக்குடியை சேர்ந்த லாரி டிரைவர் முத்தமிழ்செல்வன் (வயது 30) பலத்த காயமடைந்தார். அவரை மீட்ட மீனவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் துாத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.லாரி கவிழ்ந்ததால் மற்ற வாகனங்கள் அந்த வழியாக செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதையெடுத்து, ஜேசிபி மூலம் கவிழ்ந்த லாரியை மீட்கும் பணி நடந்தது. மேலும், பாலத்தில் உடைந்த பகுதியில் கற்கள் கொண்டு நிரப்பட்டது.