விளாத்திகுளம் அருகே தாய் மகள் கொலை வழக்கில் 6 பேரிடம் விசாரணை: காட்டுப்பகுதியில் பதுங்கி இருக்கும் மற்ற நபர்களை ட்ரோன் கேமரா மூலம் தேடும் போலீசார்!


தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள மேலநம்பிபுரம் கிராமத்தில் கடந்த 03-03-2025 திங்கள் கிழமை மாலை ஒரே வீட்டில் சீதாலட்சுமி (75) என்ற மூதாட்டி மற்றும் அவரது மகளான ராமஜெயந்தி (45) ஆகியோர் இருவரும் மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து, எட்டயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்ததில், அவர்கள் கழுத்தில் மற்றும் காதில் அணிந்திருந்த 13 பவுன் தங்க நகைகள் திருடு போனது தெரிய வந்தது, அதேபோல் இருவரின் உடற்கூறு ஆய்வு அறிக்கையில், அவர்கள் இருவரையும் 6 க்கும் மேற்பட்டோர் கழுத்தை நெரித்தும், தலையணையால் மூச்சை அமுக்கியும் கொலை செய்ததாக கூறப்படுகிறது.


இந்தநிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தலைமையிலான தனிப்படை போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்ததில், கடந்த 02-03-2025 தேதி மேலநம்பிபுரம் அருகே உள்ள  கீழநம்பிபுரம் கிராமத்தில் நடைபெற்ற கபடி போட்டியில் கலந்து கொள்ள வந்திருந்தமுத்துலாபுரம், தாப்பாத்தி,கோட்டூர், அயன்வடமலாபுரம் கவுண்டன்பட்டி, உள்ளிட்டபகுதிகளை சேர்ந்த 20 வயது முதல் 30 வயது மதிக்கத்தக்க 6 இளைஞர்கள் மேலநம்பிபுரம் கிராமத்தை சேர்ந்த ஒரு இளைஞரின் உதவியுடன், கஞ்சா மற்றும் மதுபோதையில் இரு பெண்களை நகைக்காக கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில், எட்டையாபுரம் போலீசார் 6 இளைஞர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர், அதேபோல் இந்த 6 இளைஞர்களின் கூட்டாளிகளான மற்றொரு மூன்று இளைஞர்கள், முத்துலாபுரம்,அயன்வடமலாபுரம் வைப்பாற்று ஆற்றுப் படுகைபகுதியில் பதுங்கி இருப்பதாக வந்த தகவலின் பேரில் தனிப்படை ட்ரோன் கேமரா மூலமாகவும், அதேபோல் தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை  உள்ளிட்ட பகுதிகளில் வாகன சோதனை சோதனை அமைத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.