கோவில்பட்டி அருகே ஒரே மகன் இறந்த துக்கம் தாங்காமல் தாய் தூக்கிட்டு தற்கொலை?

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே இலுப்பையூரணி - பூர்ணம்மாள் காலனி பகுதியை சேர்ந்த செல்லையா மகன் பொன்னுச்சாமி இவரது மனைவி ராஜாத்தி(42), இவர்களது ஒரே மகனான நிதிஷ்குமார்(19) என்பவருக்கு மூளைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, உடல் நலம் குன்றினார். ஒரே மகனுக்கு ஏற்பட்ட பாதிப்பை சரி செய்வதற்கு, சென்னை, பாண்டிச்சேரி, கோவை, திருவனந்தபுரம் என எல்லா சூப்பர் ஸ்பொஷலிட்டி ஆஸ்பத்திரிகளுக்கும் அவரது பெற்றோர்கள் அழைத்துச் சென்று சிகிச்சை அளித்து வந்தனர். இதற்காக, பொன்னுச்சாமி-ராஜாத்தி தம்பதியினர் பல லட்சம் ரூபாயை செலவு செய்தனர். மதுரை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி நிதீஷ்குமார் கடந்த 26ம் தேதி இறந்துவிட்டார் (புத்திர சோகம்) .  இதனால், குடும்பமே துயரத்தில் ஆழ்ந்தது. தாய் ராஜாத்தி கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளார். மகனின் இறப்பை தாங்கமுடியாமல் இறுதி சடங்கில்கூட கலந்து கொள்ளாமல் அவர் திருச்செந்துார் சென்று விட்டாராம். அங்கு கடற்கரையில் நின்று கொண்டிருந்த அவரின் நடவடிக்கைகள் அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாருக்கு சந்தேகத்தை வரவழைத்துள்ளது. அவரிடம் சென்று போலீசார் விசாரித்தபோது, அவர் தற்கொலை எண்ணத்தில் இருப்பது தெரியவந்தது. அவருக்கு போலீசார் ஆலோசனை கூறி, அவரது கணவர் பொன்னுச்சாமிக்கு தகவல் கொடுத்து அனுப்பி வைத்தனர். 


வீட்டுக்கு வந்த ராஜாத்தி, யாருடனும் பேச மறுத்து உணவு சாப்பிடாமல் இருந்துள்ளார். இந்நிலையில், ராஜாத்தி நேற்று காலை அவரது அறையில், நைலான் கயிறால் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மகனின் இறுதி சடங்கில்கூட கலந்து கொள்ளாமல் துாக்கு போட்டு தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கோவில்பட்டி பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.