கோவில்பட்டியில் ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க உதவுவதாக கூறி ரூ.90 ஆயிரம் பணம் திருடியவர் கைது!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே முடுக்குமீண்டான் பட்டியை சேர்ந்தவர் கலைச்செல்வன் (65). இவர் தனது மகளின் ஏ,டி.எம். கார்டுடன் கோவில்பட்டி பிரதான சாலையில் உள்ள தனியார் வங்கி மையத்தில் பணம் எடுக்க சென்றுள்ளார்.
அவர் கார்டை பயன்படுத்தி முயற்சித்தபோது பணம் வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அங்கு நின்று கொண்டிருந்த வாலிபரிடம் பணம் எடுக்க உதவுமாறு கூறியுள்ளார். அவரும் ஏ.டி.எம்.மில் பணம் வரவில்லை என கூறி கார்டை திருப்பி கொடுத்துள்ளார்.
அதை வாங்கிய கலைச்செல்வன், அதே பகுதியில் உள்ள மற்றொரு மையத்திற்கு சென்று பணம் எடுக்க முயற்சித்துள்ளார். அப்போது அந்த ஏ.டி.எம். கார்டு தனது மகளுடையது இல்லை என தெரிய வந்ததுள்ளது.மீண்டும் முந்தைய மையத்துக்கு சென்றபோது அந்த வாலிபர் அந்த ATM ல் இல்லாததால் அதிர்ச்சி அடைந்த அவர் சம்பந்தப்பட்ட வங்கிக்கு சென்று தனது மகளின் வங்கி கணக்கை சரிபார்த்துள்ளார்.
அப்போது கோவில்பட்டி ஏ.கே.எஸ். தியேட்டர் சாலையில் உள்ள ஒரு மையத்தில், அவரது மகளின் கார்டை பயன்படுத்தி ரூ.90 ஆயிரம் பணம் எடுக்கப்பட்டுள்ளது தெரிய வந்தது. இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் செந்தில் குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தினர். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர். இதில், முதியவரின் மகள் ஏ.டி.எம். கார்டு மூலம் ரூ.90 ஆயிரம் திருட்டில் ஈடுபட்ட சிவகாசி அருகே சாட்சியாபுரம், காமராஜபுரம் காலனியை சேர்ந்த முத்துசாமி மகன் மாரிமுத்து ( 39) எனதெரிய வந்தது. சிவகாசியில் புதுங்கி இருந்த அவரை மேற்கு போலீசார் கைது செய்தனர்.