கோவில்பட்டியில் தமிழக வெற்றி கழகத்தினர் மோதிக்கொண்ட  விவகாரம் - ஒரு பெண் உட்பட 9 பேர் மீது வழக்கு பதிவு!





தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தில் முறையாக இதுவரைக்கும் பொறுப்புகள் அறிவிக்கப்படமால் உள்ளது. இதனால் அந்த கட்சி நிர்வாகிகள் தனித்தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர். இந்தநிலையில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பதவி தொடர்பாக கோவில்பட்டியைச் சேர்ந்த சுமங்கலிராஜா என்பவர் தலைமையிலான அணியினருக்கும், சுரேஷ் என்பவர் தலைமையிலான அணியினருக்கும் இடையே பிரச்சனை நிலவி வருகிறது.




இருதரப்பினரும் வாட்ஸ் அப், பேஸ்புக் என சமூக வலைதளங்களில் அடிக்கடி வார்த்தை போர் சண்டை போட்டு வந்துள்ளனர். இந்த சூழ்நிலையில் சுமங்கிலி ராஜா அணியைச் சேர்ந்த மனோஜ் என்பவர் சுரேஷ் பற்றியும், சுரேஷ் மீது உள்ள வழக்குகள் பற்றியும் வாட்ஸ் அப்பில் பதிவு செய்ததாக கூறப்படுகிறது. 



இதனால் ஆத்திரமடைந்து சுரேஷ், மனோஜ்  நேற்று நள்ளிரவு வீட்டிற்கு சென்று மிரட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து 

இந்த பிரச்சனை தொடர்பாக இருதரப்பினரும் நள்ளிரவில் கதிரேசன் கோவில் சாலையில் உள்ள மண்டபம் அருகே பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதில் சுமங்கலி ராஜா தரப்பில் அவர் உள்பட 3 பேரும், சுரேஷ் தரப்பில் சுரேஷ் உள்பட 3பேரும் காயமடைந்து கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.



இது குறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் நடத்தி வந்த நிலையில்   தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த சுமங்கலி ராஜா என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில்  சுரேஷ், அவரது மனைவி சத்யா, சதீஷ்குமார், செந்தில், முனீஸ்வரன் கணேசன் உள்ளிட்ட ஆறு பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.



இதேபோல் மற்றொரு தரப்பைச் சேர்ந்த சுரேஷ் கொடுத்த புகாரின் அடிப்படையில்  சுமங்கலி ராஜா, மனோஜ்குமார், ராமமூர்த்தி உள்ளிட்ட மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.