கோவில்பட்டி அருகே ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து ரூபாய் 2,25,000 மதிப்புள்ள நகைகளை திருடிய நான்கு பேர் கைது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி- நாலாட்டின்புதூர் VK சித்தன் காலனி பகுதியை சேர்ந்தவர் தருமக்கண் மகன் மணி இவர் கோவில்பட்டி அருகே ஊத்துப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் வரலாற்று பட்டதாரி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி மல்லிகா (50). கழுகுமலையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கோடை விடுமுறைக்காக தனது மனைவியுடன் கடந்த 17-05-2024 அன்று கோயம்புத்தூரில் உள்ள தனது மகளைப் பார்ப்பதற்கு சென்றுள்ளனர். பின்னர் வீடு திரும்பி பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த ரூபாய் 8 லட்சம் மதிப்புள்ள 27 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து ஆசிரியர் மணி  நாலாட்டின்புதூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரியின் பேரில், சம்பவம் குறித்து துப்பு துலக்க மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. கைரேகை நிபுணர்கள் வீட்டில் பதிந்திருந்த கொள்ளையர்களின் ரேகைகளை பதிவு செய்தனர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி காமிரா பதிவுகளையும் போலீசார் ஆய்வு செய்தனர்.

இந்நிலையில் கொள்ளையர்களை பிடிக்க தூத்துக்குடி எஸ்பி பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் கோவில்பட்டி டிஎஸ்பி வெங்கடேசன் தலைமையில் மேற்கு இன்ஸ்பெக்டர் கிங்ஸ்லி தேவானந்த், எஸ்ஐக்கள் செந்தில்குமார்,   அருள்சாம்ராஜ், அசோக்குமார், ஏட்டுகள் சுரேஷ், செல்லத்துரை  மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. இந்நிலையில் கட்டாலங்குளம் பகுதியில் வாகனத்தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது அவ்வழியாக சந்தேகத்திற்கிடமான முறையில் வந்த சொகுசு காரை நிறுத்தி சோதனை செய்ததில், அந்தக்காரில் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதி அருணாச்சல மகன் கடல்மணி(49), தங்கச்சாமி மகன்களான ராமச்சந்திரன் என்ற ராம்சேட்டு (32),  சரவணன்(34), அயோத்தி ராமர் ஆகிய 4 பேரும் ஆசிரியர் மணி வீட்டில் நகைகளை திருடியது தெரிய வந்தது.

இதனையடுத்து 4 பேரையும் கைது செய்த தனிப்படை போலீசார் அவர்களிடமிருந்த ரூபாய் 2,25,000 மதிப்புள்ள 7 1/2 பவுன் தங்க நகைகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சொகுசு காரையும் பறிமுதல் செய்தனர். மேலும் இவர்கள் நான்கு பேரும் வேறு ஏதும் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர் என்று நாலாட்டின் புதூர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.