பெங்களூரில் இருந்து ஆம்னி பேருந்தில் கடத்திவரப்பட்ட 2 மூட்டைகள் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் - ஒருவரிடம் போலீசார் விசாரணை!



கோவில்பட்டிக்கு வரக்கூடிய தனியார் ஆம்னி பேருந்தில் தமிழக அரசினால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தி வரப்படுவதாக கோவில்பட்டி டிஎஸ்பி ஜெகநாதனுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து தனிப்படை உதவி ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையில் காவலர்கள் அருண் , சுரேஷ் மற்றும் போலீசார் தனியார் ஆம்னி பேருந்துகளில் சோதனை நடத்தினர். அப்போது பெங்களூரில் இருந்து கோவில்பட்டிக்கு வந்த ஒரு தனியார்  ஆம்னி பேருந்தை சோதனை செய்தபோது அதில் தமிழக அரசினால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் இரண்டு மூட்டைகள் இருப்பது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார், புகையிலை கடத்தி வந்த சண்முகம் என்ற பாண்டி என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். பறி முதல் செய்யப்பட்ட தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் சண்முகம் என்ற பாண்டியை தனிப்படை போலீசார் கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேற்கு காவல்நிலைய போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.