ஜனநாயகன் திரைப்படம் ஒரு டிக்கெட் ரூ.1000வரை விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு - கோவில்பட்டியில் பரபரப்பு - அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக தாலுகா அலுவலகத்தில் புகார்!
தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜயின் கடைசி படம் என்ற அறிவிக்கப்பட்டுள்ள ஜனநாயகன் திரைப்படம் வரும் 9ந்தேதி ரிலீஸ் ஆக உள்ளது. விஜயின் கடைசி படம் என்பதால் இந்த திரைப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. சமீபத்தில் இதன் ட்ரைலர் வெளியாக பெரும் வரவேற்பு பெற்ற நிலையில் , தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் சத்தியபாமா, சண்முகா, லட்சுமி என மூன்று திரையரங்குகளில் இந்த திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த நிலையில் இந்த திரைப்படத்திற்கு கட்டணமாக ஒரு டிக்கெட் ரூ.1000 விற்பனை செய்யப்பட்ட வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும் ரசிகர் மன்ற நிர்வாகி ஒருவரிடம் ரசிகர் ஒருவர் பேசும் ஆடியோ வெளியாகி உள்ளது. அந்த ஆடியோவில் 600,800,1000 என ஒவ்வொரு தியேட்டர்க்கும் ஒரு கட்டணம் என்று அந்த ரசிகர் மன்ற நிர்வாகி கூறும் தகவல் உள்ளது.
இந்த நிலையில் ஜனநாயகன் திரைப்படத்திற்கு அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூல் செய்வதாகவும், அதன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பினர் கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தில் புகார் மனு கொடுத்துள்ளனர். இந்த சம்பவம் கோவில்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.