கோவில்பட்டி அருகே ஆயில் கசிவு காரணமாக உபமின் நிலையத்தில் பயங்கர தீ விபத்து!




தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு தாலுகா பணிக்கர்குளம் கிராம பகுதியில் அய்யனார்ஊத்து தமிழக மின்சார வாரியத்திற்கு சொந்தமான உப மின் நிலையம் கடந்த 2014-ம் ஆண்டு துவங்கப்பட்டு, 400/230 110 கி.வோ. செயல்பட்டு வருகிறது.இன்று  அதிகாலை 4 மணியளவில் அங்குள்ள ஒரு டிரான்ஸ்பார்மில் இருந்து திடீரென ஆயில் கசிவு ஏற்பட்டது. ஒரு டிரான்ஸ்பார்மில் 60 ஆயிரம் லிட்டர் ஆயில் கொள்ளவு கொண்டது. அதனால் தீ பிடித்ததில் தீ பற்றி எரிந்து மற்ற பகுதிகளுக்கு மளமள பரவியது. இதனால் மற்ற டிரான்ஸ்பார்ம்களுக்கு தீ பரவாமல் தடுக்கும் வகையில் லைனை ஆப் செய்யப்பட்டது. கரும்புகை அதிக அளவு வெளியேறி போர்களம் போல் புகை மண்டலமாக காணப்பட்டது. 



தீ விபத்து குறித்து கோவில்பட்டி கங்கைகொண்டான் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள தீயணைப்பு நிலையத்திற்க்கு தகவல் கொடுக்கப்பட்டது. சுமார் 7 தீயணைப்பு வண்டிகள் வந்து தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். தீயணைப்பு வீரர்கள் ஜேசிபி உதவியுடன் மணலை கொட்டி முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். மேலும் கரும்புகை வானில் பரவி கயத்தாறு வட்டார பகுதிகளில் சூழ்ந்தது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். தாசில்தார் சுந்தர ராகவன், கயத்தாறு இன்ஸ்பெக்டர் சுகாதேவி மற்றும் மின்வாரிய அலுவலர்கள் ஆய்வு செய்து தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

 மின் உப நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் வட்டார பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.