5 மாவட்ட போலீசாரால் தேடப்பட்ட முகமூடி கொள்ளையன் கோவில்பட்டியில் துப்பாக்கி முனையில் கைது! 




நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 5 மாவட்ட போலீசாரால் தேடப்பட்டு வந்த பிரபல முகமூடி கொள்ளையனை கோவில்பட்டியில் தனிப்படை போலீசார் துப்பாக்கி முனையில் மடக்கி பிடித்து கைது செய்தனர். இவர் மீது 70க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது 



தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி டிஎஸ்பி ஜெகநாதன் தலைமையிலான தனிப்படை உதவி ஆய்வாளர்  செந்தில்குமார், ஏட்டு செல்லத்துரை மற்றும் காவலர் சுரேஷ் ஆகியோர் பெத்தேல் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். 


அப்போது அந்த வழியாக பைக்கில் வேகமாக வந்த நபரை போலீசார் நிறுத்த முயன்றனர். ஆனால் அந்த நபர், பைக்கை நிறுத்தாமல் வேகமாக தப்பிச் சென்றார். இதைத்தொடர்ந்து அவரை, போலீசார் வாகனத்தில் பின்தொடர்ந்து விரட்டிச் சென்று மடக்கினர்.இதையடுத்து அந்த நபர், பைக்கை கீழே போட்டு விட்டு தப்பியோடினார். ஆனாலும் போலீசார் அவரை விடாமல் பின்தொடர்ந்து விரட்டிச் சென்று துப்பாக்கி முனையில் மடக்கி பிடித்தனர். 



பின்னர் அவரை, மேற்கு காவல்நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதில் அவர், நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள கீழகாடுவெட்டி இந்திரா காலனியைச் சேர்ந்த நடராஜன் மகன் சந்திரகுமார் (33) என்பதும், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் ஆகிய 5 மாவட்ட போலீசாரால் தேடப்பட்டு வரும் பிரபல முகமூடி கொள்ளையன் என்பதும் தெரிய வந்தது. 



இதைத்தொடர்ந்து போலீசார் அவரிடம் நடத்திய கிடுக்குப்பிடி விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. 


இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: கோவில்பட்டியில் துப்பாக்கி முனையில் பிடிபட்ட சந்திரகுமார் மீது கோவில்பட்டி, எட்டயபுரம், எப்போதும்வென்றான், சாத்தூர், ஏழாயிரம்பண்ணை, முன்னீர்பள்ளம், சேரன்மகாதேவி, சங்கரன்கோவில், ஆலங்குளம், தக்கலை, சிவந்திப்பட்டி உள்ளிட்ட பல்வேறு காவல்நிலையங்களில் வீடு,  கடைகளை உடைத்து கொள்ளையடித்தல், பைக்குகள் திருட்டு என பல்வேறு குற்ற வழக்குகளில் போலீசார், சந்திரகுமாரை தேடி வந்தனர். பெரும்பாலும் சந்திரகுமார், கொள்ளையை அரங்கேற்றியதும் ஊருக்குள் வராமல் களக்காடு பகுதியில் மலையில் சென்று காட்டுப்பகுதியில் பதுங்கி கொள்வார்.

வீடு மற்றும் கடைகளில் கொள்ளையில் ஈடுபடும் போது போலீசாருக்கு அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக முகமூடி அணிந்தும், கையுறை அணிந்தும் கொள்ளையில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் அவரை பிடிப்பதில் போலீசாருக்கும் கடும் சிரமம் ஏற்பட்டது. எனினும் கோவில்பட்டியில் நடந்த வாகன சோதனையின் போது போலீசாரிடம் துப்பாக்கி முனையில் சிக்கியுள்ளார் என போலீசார் தெரிவித்தனர்.



இதையடுத்து சந்திரகுமாரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 3 டூவிலர்கள், அரிவாள், கடப்பாறை, ஸ்குருடிரைவர், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இவர் மீது நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் 70க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. 17 வழக்குகளில் போலீசார் சந்திரகுமாரை தேடி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 




கோவில்பட்டியில் வாகன சோதனையின் போது பைக்கில் தப்பிச் சென்ற பிரபல முகமுடி கொள்ளையன் சந்திரகுமாரை டிஎஸ்பி ஜெகநாதன் தலைமையிலான தனிப்படை போலீசார் தங்களது வாகனத்தில் பின்தொடர்ந்து விரட்டிச் சென்று மடக்கி பிடித்தனர். துரிதகதியில் செயல்பட்டு கொள்ளைனை மடக்கி பிடித்த தனிப்படை போலீசாரை எஸ்பி ஆல்பர்ட்ஜான் வெகுவாக பாராட்டினார்.