கோவில்பட்டியில் மாற்றுத்திறனாளிகளுக்கான இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கும் விழா!
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கான இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கும் விழா நடைபெற்றது.இதில், திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கலந்து கொண்டு 56 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா, கலைஞர் கனவு இல்லத்தின் வழியாக 6 பேருக்கு வீடுகள் கட்டப்பட்டு அதற்கான சாவி வழங்கினார், மேலும் மாற்றுத் திறனாளிகளுக்கான இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் 45 பேருக்கும், மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் 30 பேருக்கும் வழங்கினார்.
நிகழ்வில் பேசிய கனிமொழி எம்.பி; தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றது முதல் எல்லோருக்கு எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதற்காக விவசாயிகள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள், தொழில் முனைவோர், பள்ளி கல்லூரி மாணவர்கள் என அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை உருவாக்கி செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
மாற்றுத்திறனாளிகளுக்கு தன் கையில் வைத்திருக்கும் துறையின் மூலமாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாக பல்வேறு திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்,தமிழ்நாடு முழுவதும் உள்ள மாற்றுத்திறனாளிகள் மகிழ்ச்சி அடையும் வகையில் சில நாட்களுக்கு முன்பு அவர்களின் நீண்ட கால கோரிக்கையாக இருந்த அரசியல் அதிகாரத்தில் எங்களுக்கு பங்கு வேண்டும், அப்போதுதான் எங்களுடைய உரிமைகளை நாங்கள் ஆணித்தரமாக எடுத்துச்சொல்ல முடியும் என்ற அந்தக் கோரிக்கையை ஏற்றுக் கண்டு, உள்ளாட்சிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு என்று தனியாக ஒதுக்கீடு செய்யப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன் உதாரணமான ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.
தமிழ்நாடு என்பது திராவிட மாடல் ஆட்சியில், அதே நேரத்தில் இந்த நாட்டுக்கு முன் உதாரணமாக இருக்கக்கூடிய ஆட்சியை முதலமைச்சர் நடத்திக் கொண்டிருக்கிறார் ,தமிழ்நாட்டு மக்களின் உரிமைகள், தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய குழந்தைகளின் எதிர்காலம் பாதுகாக்க கூடிய வகையில் நம்முடைய முதல்வருக்கு நாம் தொடர்ந்து உறுதுணையாக இருக்க வேண்டும் என்று பேசினார்.
இந்த நிகழ்ச்சியில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, தூத்துக்குடி மாவட்ட கூடுதல் ஆட்சியர் மற்றும் திட்ட இயக்குநர் இரா.ஐஸ்வா்யா, தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலுவலர் ரவிச்சந்திரன், கோவில்பட்டி கோட்டாட்சியர் மகாலட்சுமி , தாசில்தார் சரவணபெருமாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.