கோவில்பட்டியில் காரில் கடத்தி வந்த ரூ.10 லட்சம் மதிப்பிலான 600 கிலோ குட்கா பறிமுதல் – 2 பேர் கைது!


தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் காரில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் கடத்தி வரப்படுவதாக மேற்கு காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து இளையரசனேந்தல் சாலையில் உள்ள காவல்துறை சோதனைச்சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த காரை சோதனை செய்ததில், 53 மூட்டைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கணேஷ் பிராண்ட் குட்கா புகையிலைப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.மொத்தம் சுமார் 600 கிலோ குட்கா இருந்தது தெரியவந்ததுடன், அதன் மதிப்பு ரூ.10 லட்சம் என கூறப்படுகிறது.


இதுதொடர்பாக எப்போதும்வென்றான் பகுதியைச் சேர்ந்த வேல்முருகன், சேலம் மாவட்டம் மேட்டூர் தாலுகா மெய்ச்சேரியைச் சேர்ந்த ரமேஷ் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து 600 கிலோ குட்கா, 2 செல்போன்கள், கார் மற்றும் ரூ.7 லட்சத்து 57 ஆயிரத்து 500 ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.


இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நபர்களின் வங்கிக் கணக்குகள் மற்றும் நிதிப் பரிவர்த்தனைகள் குறித்து போலீசார் தீவிர நிதி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சட்ட விதிகளுக்கு உட்பட்டு, சம்பந்தப்பட்ட வங்கிக் கணக்குகளை முடக்குவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.