கோவில்பட்டி அருகே சட்ட விரோதமாக ரேஷன் அரிசி கடத்திச் சென்ற 3 பேர் கைது - 2 1/2 டன் ரேஷன் அரிசி,வாகனம் பறிமுதல்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள அய்யநேரி பகுதியில் இருந்து ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் ஸ்டீபன்ராஜ், தனி பிரிவு காவலர்கள் அருணாச்சலம் முத்துராமலிங்கம் ஆகியோர் அப்பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சுபா நகர் பகுதியில் வந்த ஒரு வாகனத்தை சோதனை செய்த போது அதில் 50 கிலோ எடை கொண்ட 48 ரேஷன் அரிசி மூட்டைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ரேஷன் அரிசி கடத்திய கோவில்பட்டி ஜோதி நகரைச் சேர்ந்த ராபர்ட், வெள்ளாலங்கோட்டை பகுதியைச் சேர்ந்த சங்கிலி பாண்டி, முருகன் ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் கடத்திச் செல்லப்பட்ட இரண்டரை டன் ரேஷன் அரிசி, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனம் ஆகியவற்றை கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் பறிமுதல் செய்து, உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.