விளாத்திகுளம் அருகே பள்ளிச் சிறுவன் மாயமான வழக்கில் 2 தனிப்படைகள் அமைத்து சிறுவனை தீவிரமாக தேடி வருவதாக போலீசார் தகவல்:4 நாட்களுக்கு மேலாகியும் சிறுவனை கண்டுபிடிக்க முடியவில்லை என்பதால் பெற்றோர் வேதனை.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள தெற்கு முத்தாலபுரம் என்ற கருப்பசாமி கோவில்பட்டி பகுதியை சேர்ந்தவர் முனியசாமி என்பவரது மகன் ஆனந்தராஜ் (15). பேரிலோவன்பட்டியில் உள்ள அரசு உதவி பெறும் தி.வெ.அ. நல்லழகு நாடார் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் பள்ளியிலிருந்து ஊருக்கு வரும் வேன் மூலமாக பள்ளிக்கு சென்று படித்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை (04.01.2025) பள்ளிக்குச் சென்ற ஆனந்தராஜ் வீடு திரும்பவில்லை. இதைத்தொடர்ந்து அவரது பெற்றோர் பள்ளிக்கு தொடர்பு கொண்டு கேட்டபோது வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை என இரண்டு நாட்களும் ஆனந்த் ராஜ் பள்ளிக்கு வரவில்லை என்று பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்து ஆனந்தராஜ் பெற்றோர் சிறுவனை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை என்பதால் எட்டையபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ஆனால் புகார் அளத்து 4 நாட்களுக்கு மேலாகியும் சிறுவனை கண்டுபிடிப்பதில் போலீசார் அலட்சியம் காட்டி வருவதாக குற்றச்சாட்டும் எழுந்துள்ளது....
இந்த வழக்கின் விசாரணை குறித்து எட்டையபுரம் காவல் ஆய்வாளரிடம் கேட்டதற்கு...
"சிறுவனை தேடுவதற்காக காவல்துறையினர் 2 தனிப்படைகள் அமைத்து தீவிரமாக தேடிக்கொண்டிருப்பதாகவும், இந்த வழக்கின் முதற்கட்ட விசாரணையில், சிறுவன் மாயமான தினத்தன்று பள்ளிச் சீருடையில் பேரிலோவன்பட்டிக்கு பள்ளி செல்லும் வேனில் சென்றதாகவும், பின் அங்கிருந்து கலர் சட்டையில் பஸ் ஏறிச் சென்றதாகவும் தகவல் கிடைத்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி, மாயமான சிறுவன் ஆனந்த் ராஜ் செல்போனில் அதிக நேரம் கேம் விளையாடும் பழக்கத்தை கொண்டவராக இருந்ததால் அந்த பழக்கத்தில் எங்கும் சென்றுள்ளாரா? என்ற கோணத்திலும் சிறுவன் பயன்படுத்திய செல்போனையும் கொண்டுவரச் சொல்லி அதில் ஏதேனும் தகவல் கிடைக்கிறதா... என்பது பற்றியும் விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் தெரிவித்துள்ளனர்..."