தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியில் பருவம் தவறி பெய்த மழை மற்றும் கடந்த வாரம் பெய்த தொடர் கனமழை காரணமாக விளாத்திகுளம், சூரங்குடி, குளத்தூர், புதூர், நாகலாபுரம், காடல்குடி, கந்தசாமிபுரம், ஜெகவீராபுரம்     உள்ளிட்ட பகுதிகளை சுற்றியுள்ள நூற்றுக்கணக்கான கிராமங்களில் லட்சக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த மானாவாரிப் பயிர்களான வெங்காயம், உளுந்து, மல்லி, சோளம், மக்காச்சோளம், கம்பு, பாசி உள்ளிட்ட அனைத்தும் நீரில் மூழ்கியதால் முற்றிலுமாக சேதமடைந்துள்ளன. அதிலும், புதூர் பகுதிகளில் சுமார் 6000 ஏக்கரில் ஊடுபயிராகவும், தனிபயிராகவும் சின்ன வெங்காயம் சாகுபடி செய்திருந்தநிலையில் தற்போது பெய்து அதிகப்படியான தொடர் மழையினால் வெங்காயம் பயிர்கள் முற்றிலுமாக நீரில் மூழ்கி நாசமாகியுள்ளது. அதுமட்டுமன்றி வெள்ளத்தின் காரணமாக விவசாய நிலத்தில் இருந்த கரம்பை மணலும் அடித்துச் செல்லப்பட்டதால் நிலத்தை சீரமைக்கவே ஏக்கருக்கு ரூ.1 லட்சம் செலவு செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என கவலை தெரிவிக்கின்றனர் இப்பகுதி விவசாயிகள்....

இந்த நிலையில் தற்போது தமிழக அரசு சார்பில், மானாவாரிப் பயிர்களுக்கு நிவாரண தொகையாக ரூ.8500 வழங்கப்படும் என அறிவிப்பை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மறுபரிசீலனை செய்து ஏக்கர் ஒன்றுக்கு ரூ.25 ஆயிரம் வழங்கி இப்போது விவசாயிகளின் துயர் நீங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அதேபோல்  கூட்டுறவு சங்கங்களில் வட்டி இல்லா கடன் வழங்க வேண்டும் என்று  விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். அதேபோன்று கடந்த 2020-2021 ம் ஆண்டு பருவம் தப்பிய மழை காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் அழிந்ததால் தமிழக அரசு நிவாரணத் தொகையாக அறிவித்த ரூ.10 ஆயிரமும் தற்போது வரை விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை... என்பதால் ஏற்கனவே, அறிவித்திருந்த நிவாரணத் தொகையே வரவில்லை... தற்போதும் நிவாரணத்தொகை அறிவித்திருக்கிறார்கள். இது எந்த விதத்தில் எங்களுக்கு வந்து சேரும் என்ற நம்பிக்கையே இல்லை என்று கவலையுடன் கூறுகின்றனர்.

ஆகையால், தமிழக அரசு இப்பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க ஏற்கனவே அறிவித்திருந்த 2020-21 ஆம் ஆண்டிற்கான நிவாரணத் தொகையும், 2022-23 ஆம் ஆண்டிற்கான பயிர் காப்பீட்டு தொகையும், தற்போது அறிவித்துள்ள நிவாரணத்தொகையும்  உடனடியாக விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்த துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு விளாத்திகுளம் பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.