தலைக்கேறிய மது போதை காவல் நிலையம் அருகே இருந்து காரைக்கடத்திச் சென்று விபத்தில் சிக்கிய இளைஞர்கள் - சினிமா பாணியில் விடாது துரத்திச் சென்று கைது செய்த போலீசார் - எட்டயபுரத்தில் பரபரப்பு!
விபத்து ஏற்படுத்திய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு!
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே தனியார் நிறுவனம் சார்பில் காற்றில் இருந்து மின்சாரம் தயாரிப்பதற்காக காற்றாடிகள் அமைக்கும பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளுக்கு தேவையான காற்றாடிகள் கனரக வாகனங்கள் மூலமாக கொண்டு வரப்படுகின்றன. அந்த வகையில் நேற்று காற்றாடிகள் கனரக வாகனங்கள் மூலமாக கொண்டு வரப்பட்ட போது, இதன் பாதுகாப்பிற்காக தர்மபுரியை சேர்ந்த சார்லஸ் (45) ஒரு காரில் பின்னால் வந்துள்ளார். எட்டயபுரம் காவல் நிலையம் அருகே வந்து கொண்டிருந்த போது, பைக்கில் வந்த 3 நபர்கள் திடீரென காரை வழிமறித்து, சார்லசிடம் பணம் கேட்டுள்ளனர். அவர் தன்னிடம் பணம் இல்லை என்று கூற, அவரிடம் இருந்த செல்போனை பிடிங்கிய அந்த மர்ம நபர்கள் அதில் இருந்த சிம்கார்டை எடுத்து கீழே போட்டு விட்டு, சார்லசினை கீழே தள்ளிவிட்டு, காரை எடுத்துக்கொண்டு சென்றுள்ளனர். 2 பேர் காரில் செல்ல , ஒருவர் பைக்கில் சென்றுள்ளார்.இதனால் அதிர்ச்சியடைந்த சார்லஸ் உடனடியாக அருகில் இருந்த எட்டயபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். இதையெடுத்து எட்டயபுரம் காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையில் போலீசார் அந்த காரை துரத்திச் சென்றனர். அதிவேகமாக மர்ம நபர்கள் ஓட்டிச்சென்ற கார், கீழஈரால் மெயின் ரோட்டில் உள்ள ஹோட்டல் அருகேயுள்ள சுவரில் மோதி விபத்துக்குள்ளானது இதையடுத்து 3 பேரும் பைக்கில் தப்பியோடியுள்ளனர். பின்னால் துரத்தி வந்த போலீசாரும் 3 பேரையும் விடமால், துரத்தி சென்று, மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கோவில்பட்டி சீனிவாச நகரைச் சேர்ந்த தினேஷ் (23), விளாத்திகுளத்தினைச் சேர்ந்த ஆகாஷ்(18), அஜய்(19) என்பதும் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து 3 பேரையும் கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர்களிடம் இருந்து திருடிச்சென்ற கார் மற்றும் ஒரு பைக் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.
சார்லசிடம் காரை திருடிச் செல்வதற்கு முன், 3 பேரும் டாஸ்மாக் பார் ஒன்றில், மது அருந்தி விட்டு ஒரே பைக்கில் வந்துள்ளனர். அப்போது பைக்கில் வந்த போது அதில் நம்பர் பிளேட் இல்லாமல் இருந்ததை பார்த்த போலீசார் 3 பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து, எச்சரித்து அனுப்பி உள்ளனர். நம்பர் பிளேட் கீழே விழுந்து விட்டதாக கூறி அந்த நம்பர் பிளேட்டினை பைக்கில் மாட்டி கொண்டு தான் 3 பேரும் காவல் நிலையத்தில் இருந்து கிளம்பி சென்றுள்ளனர்.
அதன் பிறகு தான் சார்ல்ஸ்யிடம் பணம் கேட்டு மிரட்டி, காரை பறித்துச் சென்றது குறிப்பிடத்தக்கது.
கைது செய்யப்பட்டுள்ள தினேஷ் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும்,, அஜய் மீது ஒரு திருட்டு வழக்கும் நிலுவையில் இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
மது போதையில், காவல் நிலையம் அருகே காரை திருடிச் சென்று விபத்து ஏற்படுத்திய சம்பவம் கோவில்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.