விளாத்திகுளத்தில் சிறப்பாக நடைபெற்ற யோகி ராம் சுரத்குமார் நாம வழிபாடு - திரளாக பங்கேற்ற பக்தர்கள்...!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள யோகி ராம் சுரத்குமார் நாம கேந்திரத்தில், தமிழ் மாதமான மார்கழி முதல் நாள் மற்றும் பகவான் பிறந்த மாதாந்திர சுவாதி நட்சத்திர நாளை முன்னிட்டு இன்று (16/12/2025) கோவிலில் சிறப்பு விளக்கு பூஜை நடைபெற்றது. இதனையொட்டி அருள்மிகு ஸ்ரீ விசிறி விநாயகர் மற்றும் பகவான் யோகி ராம்சுரத்குமாருக்கு புனித நீர் ஊற்றப்பட்டு பால், தேன், இளநீர், சந்தனம், திருநீறு உள்ளிட்ட பல்வேறு விஷேச பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைப்பெற்றதைத் தொடர்ந்து அலங்கார தீபாராதனை காட்டப்பட்டது. மேலும், கோவிலில் நடைபெற்ற இந்த விஷேச பூஜையில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்ட நிலையில் 51 பெண்கள் திருவிளக்கிற்கு பல்வேறு விதமான பூஜைப் பொருட்கள் கொண்டு சிறப்பு பூஜைகள் செய்து மனமுருகி வழிபட்டனர். இதனையடுத்து பகவான் யோகி ராம் சுரத்குமாருக்கு தீபாராதனை காட்டப்பட்டு, "யோகி ராம் சுரத்குமார்" நாம வழிபாட்டு முறையில் வெகு சிறப்பாக பூஜைகள் நடைபெற்றன. இதில் விளாத்திகுளம் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று மனமுருகி வழிபட்டனர். பின்னர் நாம கேந்திரத்தில் நடைபெற்ற அறுசுவை அன்னதானத்தில் பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு உணவருந்திச் சென்றனர்.