மழையால் சேதம் அடைந்த எட்டயபுரம் மகாகவி பாரதியார் பிறந்த இல்லம் மறுசீரமைக்கும் பணி: கனிமொழி எம்.பி., ஆய்வு!


தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள எட்டயபுரத்தில் அமைந்துள்ள மகாகவி பாரதியார் பிறந்த இல்லத்தின் முதல் தளம் மழையால் பாதிக்கப்பட்டுச் சேதமடைந்தது. இதையடுத்து பொதுப்பணித்துறையின் பாரம்பரிய கட்டிடங்கள் பிரிவு பொறியாளர்களால் எட்டயபுரம் மகாகவி பாரதியார் பிறந்த இல்லம் ஆய்வு செய்யப்பட்டு, தயாரிக்கப்பட்ட திட்ட அறிக்கையின்படி, ரூ.1.53கோடி மதிப்பீட்டில் மகாகவி பாரதியார் இல்லம் பழைமை மாறாமல் மறுசீரமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.இந்த நிலையில், இன்று எட்டயபுரம் மகாகவி பாரதியார் பிறந்த இல்லத்தில் நடைபெறும் மறுசீரமைக்கும் பணிகளை திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி  நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். நடைபெற்று வரும் பணிகள் குறித்தும் கேட்டறிந்தது மட்டுமின்றி,, பழமை மாறாமல் அதே தோற்றத்துடன் அமைக்க வேண்டும் என்று ஆலோசனைகளையும் வழங்கினார். 




இந்த ஆய்வின் போது, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர்  கீதா ஜீவன், சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீதக்கண்ணன், விளாத்திகுளம் தெற்கு ஒன்றிய செயலாளர் இம்மானுவேல்,எட்டயபுரம் பேரூராட்சி மன்ற தலைவர் ராமலட்சுமி சங்கரநாராயணன் எட்டையாபுரம் தாசில்தார் சுபா உள்பட பலர் கலந்துகொண்டனர்.