விடுபட்ட  தகுதியுள்ள மகளிருக்கு விரைவில் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் -  விளாத்திகுளம் அருகே நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கனிமொழி எம்.பி. பேச்சு!


தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே எப்போது வென்றான் ஊராட்சியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு  கிராம சபை கூட்டம் நடைபெற்றது.


கூட்டத்தில் கனிமொழி எம்பி பேசுகையில், மக்களின் கோரிக்கைகள் என்ன என்பதை நேரில் வந்து கேட்டு தெரிந்து கொள்வதற்காக தான் இந்த கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படுகிறது. அரசு அதிகாரிகள் அத்தனை பேரும் கிராமப்புறங்களில் இருக்கக்கூடிய மக்களை தேடி வந்து மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று அங்கேயே எந்த மாதிரியான நடவடிக்கை எடுக்க முடியுமா அதை எடுத்து அந்த இடத்திலேயே தீர்வு காணக்கூடிய அரசு நம்முடைய திமுக அரசு.  இங்கு உள்ள நீர் நிலைகளில் மண் எடுப்பதற்கு விவசாயிகளுக்கு வாய்ப்பு தரப்பட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் நீர் நிலைகளில் விவசாயிகளுக்கு தேவையான மண் எடுப்பதற்கு அரசாணை வெளியிட்டிருக்ககூடிய ஆட்சி  திமுக ஆட்சி. விவசாயிகள் தங்கள் நிலங்களுக்காக குளங்களில் உள்ள கரம்பை மண், வண்டல் மண் எடுத்துக் கொள்ளலாம் என்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எல்லா பகுதிகளிலும் இருக்கக்கூடிய விவசாயிகள் இதன் மூலம் பயன் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். ஒரு சில இடங்களில் பிரச்சனைகள் இருக்கும் பட்சத்தில் எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் நிச்சயம் தீர்வு காணப்படும். இங்கே தெரிவித்து இருக்கக் கூடிய பிரச்சினைகளுக்கு விரைவில் 


மாவட்ட நிர்வாகமும் நாங்களும் நிச்சயம் தீர்வு காண்போம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். எப்போதும் வென்றான் பகுதியில் நீர் நிலைகளில் மண் எடுப்பதற்கு உள்ள தடை நிச்சயம் அகற்றப்படும்.  மகளிர் உரிமைத்தொகை மற்றும் 100 நாள் வேலை வாய்ப்பு தொடர்பாக தொடர்ந்து கோரிக்கைகள் வந்து கொண்டிருக்கிறது.

100 நாள் வேலைவாய்ப்பை மக்களுக்கு தரவேண்டும் என்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட திட்டம் தான் அது. இதற்கு மத்திய அரசுதான் நிதியை தர வேண்டும். ஆனால் இன்னும் நிதி வரவில்லை. மத்திய அரசின் நிதி வந்தவுடன் நிச்சயமாக 100 நாள் வேலை கிராமப்புற மக்களுக்கு தரப்படும்.  அதற்கு முன்பாக நம்முடைய அரசால் எவ்வளவு வேலை வாய்ப்பு தர முடியுமோ அதை அந்த பகுதியில் உள்ள அதிகாரிகள் செய்து தர முன்வர வேண்டும் என நம்முடைய முதலமைச்சர் அறிவுறுத்தி இருக்கிறார். அதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொளப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். மகளிர் உரிமைத்தொகை குறித்த கணக்கெடுப்பு தேர்தல் காரணமாக தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இன்னும் கொஞ்ச நாளில் யார் யாரெல்லாம் விடுபட்டு இருக்கிறார்களோ அவர்களுக்கெல்லாம் மகளிர் உரிமை தொகை வழங்குவதற்கான ஏற்பாடுகளை முதலமைச்சர் செய்து கொண்டிருக்கிறார். விடுபட்ட மகளிருக்கு விரைவில் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும். உங்களின் கோரிக்கைகளை எங்களிடம் நேரடியாக சொல்வதற்கும் பகிர்ந்து கொள்வதற்குமான ஏற்பாடு தான் இந்த கிராம சபை கூட்டம். வேறு எந்த கோரிக்கைகளாக இருந்தாலும் எங்களிடம் மனுவாக தந்தால் நிச்சயமாக நடவடிக்கை எடுப்போம். அதற்காகத்தான் இங்கு அனைவரும் கூடியுள்ளோம். மக்களின் கோரிக்கைகளை தேவைகளை சரி செய்து தருவதற்காக தான் நாங்கள் இருக்கிறோம் என்றார்.


கிராம சபை கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் க. இளம் பகவத் தலைமை வகித்தார். விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினர் மார்க்கண்டேயன், கூடுதல் ஆட்சியர் ஐஸ்வர்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். எப்போதும்வென்றான் ஊராட்சி மன்ற தலைவர் முத்துக்குமார் வரவேற்புரையாற்றினார். சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு உரையாற்றினர். கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் மகாலட்சுமி,திமுக ஒன்றிய செயலர்கள் காசி விஸ்வநாதன் நவநீதக்கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்....