விளாத்திகுளம் அருகே அளவிற்கதிகமான காட்டுப்பன்றிகளின் அட்டகாசம் - அடித்துக்கொன்ற மக்கள்...!
விவசாயப் பயிர்களை வேட்டையாடிய காட்டுப்பன்றிகள் தற்போது விவசாயிகளையும்... : 3 பேருக்கு தீவிர சிகிச்சை : காட்டுப்பன்றியை கட்டுப்படுத்த தமிழ்நாடு வனத்துறைக்கு வழியில்லையா?
தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக காட்டுப்பன்றிகள் மற்றும் மான்கள் தொல்லையால் விவசாயிகள் பெருமளவில் பாதிப்புக்குள்ளாகி வருவது தொடர் கதையாக உருவாகி வருகிறது. அதிலும் குறிப்பாக தென்மாவட்டமான தூத்துக்குடி மாவட்டத்தில் விளாத்திகுளம், புதூர், எட்டையபுரம், கோவில்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் லட்சக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களில் பெருமளவில் விவசாய பயிர்களை காட்டுப்பன்றிகள் மற்றும் மான்கள் சேதப்படுத்துவது ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. இது பற்றி இப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் காட்டு பன்றிகள் மற்றும் மான்களின் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டி தமிழ்நாடு அரசுக்கும், தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்திற்கும் தொடர்ந்து வலியுறுத்தியும், விவசாயிகளின் கஷ்டத்தைப்போக்க... ஒரு துளி கூட தமிழ்நாடு அரசு இதில் முனைப்பு காட்ட வில்லை என்பது தான் வேதனையான உண்மை...!
ஆரம்ப காலத்தில் விவசாய பயிர்களை மட்டுமே வேட்டையாடி வந்த காட்டுப்பன்றிகள் தற்போது விவசாயிகளையும் வேட்டையாடத் தொடங்கியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு விளாத்திகுளம் அருகே உள்ள சிவலார்பட்டி கிராமத்தில் விவசாயி ஐயப்பன் என்பவர் காட்டுப்பன்றியால் கொடூரமாக தாக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்கு பின் உயிர் பிழைத்தார். இந்த சுவடு கொஞ்சம் கூட மறைவதற்கு முன்பே தற்போது அடுத்த துயரமாக இன்றும் அயன் கரிசல்குளம் கிராமத்தைச் சேர்ந்த சண்முகராஜ், இராமசாமி, மோகன்ராஜ் ஆகிய 3 விவசாயிகள் தங்களது நிலத்தில் விவசாயம் பணிகள் செய்து கொண்டிருந்தபோது அங்கு வந்த காட்டுப்பன்றியை விரட்ட முயன்றுள்ளனர்.. அப்போது, காட்டு பன்றியால் இந்த 3 கொடூரமாக தாக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து அக்கிராமத்தைச் சேர்ந்தவர்கள் காட்டுப்பன்றி தாக்கியதில் காயம் அடைந்தவர்களை மீட்டு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் 3 விவசாயிகளுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் காட்டுப் பன்றி அரசு கட்டுப்படுத்தும் என்று நம்பி ஏமாந்த மக்கள் ஆத்திரத்தில் இன்று அயன் கரிசல்குளத்தில் விவசாயிகளை தாக்கிய காட்டுப்பன்றியை அக்கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஆத்திரத்தில் அடித்துக் கொன்றுள்ளனர்.
தொடர்ச்சியாக.... பலகட்ட போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் என விவசாயிகள் தங்களது கோரிக்கையை வலியுறுத்தியும் சற்றும் செவி சாய்க்காத தமிழக அரசின் மெத்தனப்போக்கினால் பயிர்களை மட்டுமே நாசமாக்கி வந்த காட்டுப்பன்றிகள் தற்போது விவசாயிகளையும் தாக்கிக்கூடிய சூழ்நிலை உண்டாகியுள்ளது.
இதற்கு உடனடியாக தமிழ்நாடு அரசு புதிய சட்டம் இயற்றி விவசாயிகளின் விவசாய பயிர்களை வேட்டையாடிக் கொண்டிருக்கும் காட்டுப்பன்றிகளை ஒட்டுமொத்தமாக கட்டுப்படுத்துவதற்கு தமிழ்நாடு வனத்துறை மூலம் காட்டுப்பன்றிகளை சுட்டுக்கொன்று அதன் இனப்பெருக்கத்தை முற்றிலுமாக கட்டுப்படுத்துவதே இப்பிரச்சனைக்கு தீர்வாக அமையும் என்பது அனைத்து விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது...